கிருஷ்ணகிரி ரயில்பாதை திட்டம்: செப்டம்பரில் மத்திய குழு ஆய்வு: எம்பி செல்லகுமார் தகவல்

கிருஷ்ணகிரி ரயில்வே பாதை திட்டம் குறித்து மத்திய குழுவினர் செப்டம்பருக்குள் ஆய்வு செய்ய உள்ளதாக

கிருஷ்ணகிரி ரயில்வே பாதை திட்டம் குறித்து மத்திய குழுவினர் செப்டம்பருக்குள் ஆய்வு செய்ய உள்ளதாக கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் அ.செல்லகுமார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் வட்டம், சீக்கலப்பள்ளி கிராமம், வாணிஒட்டு அருகே சாமல்பள்ளம் மற்றும் சூளகிரி சின்னார் ஆறுகள் தென்பெண்ணை ஆற்றுடன் கூடும் இடத்தில் ஒரு புதிய அணைக் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அழியாளம் அணைக்கட்டிலிருந்து ராயக்கோட்டை பகுதிக்கு தென்பெண்ணை ஆற்றிலிருந்து புதிய கால்வாய் அமைக்க வேண்டும். கொடியாளம் அணைக்கட்டிலிருந்து நீரேற்று முறையில் 50 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். 
எண்ணேகொள்புதூர் அணைக்கட்டு பகுதியில் இருந்து பெரிய ஏரிக்கு மற்றும் பிற ஏரிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரவேண்டும். பாரூர் ஏரியின் கிழக்கு பிரதான கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தி ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பர்கூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 33 ஏரிகளில் நீர் நிரப்பும் வகையில் கால்வாய் அமைக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இந்தத் திட்டங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற அலுவலர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, ஆய்வு செய்து விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். 
மேலும், கிருஷ்ணகிரி - ஒசூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து, அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். இதேபோல், கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலை பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தி உள்ளேன். மத்தூர், ஊத்தங்கரை ஆகிய இடங்களில் உயர் பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். 
பெங்களூரு பொம்மசந்திர வரையில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூர் வரையில் நீட்டிக்க வேண்டும். கிருஷ்ணகிரி வழியே ஜோலார்பேட்டை  -ஒசூர் ரயில் பாதை அமைக்கும் திட்டம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். 
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற போதிய வருவாய் இல்லை எனக் கூறி, திட்டத்தை நிறைவேற்ற இயலாது என அறிக்கை தயாரித்துள்ளதாக தெரிகிறது. ஆனால், உண்மை நிலை அது அல்ல. இந்த ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் வருவாய் கிடைக்கும் வழிவகைகளை எடுத்து கூறியுள்ளேன். இதையடுத்து, இத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய செப்டம்பருக்குள் ஆய்வுக் குழுவினர் கிருஷ்ணகிரிக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com