சுடச்சுட

  

  ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது

  By DIN  |   Published on : 15th August 2019 10:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடக அணைகளிலிருந்து நீர்திறப்புக் குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நொடிக்கு 65 ஆயிரம் கன அடியாக நீர்வரத்துக் குறைந்துள்ளது. இருப்பினும் அதிக நீர்வரத்துக் காரணமாக  7-ஆவது நாளாக அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் புதன்கிழமையும் தடை விதித்தது.
  கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதி, கேரளத்தின் வயநாடு பகுதிகளில் பெய்து வரும் கனமழை தற்போது குறைந்துள்ளதால், கர்நாடகத்தில் உள்ள கபினி,  கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால், காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. 
  தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து, புதன்கிழமை காலை நொடிக்கு 40 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது. மேலும் 11 மணி நிலவரப்படி நொடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து, தற்போது நொடிக்கு 65 ஆயிரம் கன அடியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
  கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவுகள் குறைக்கப்பட்டதால், வெள்ளப் பெருக்கின்போது மூழ்கிய பிரதான அருவி, சினி அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகள் வெளியே தெரிந்தும், சேதமடைந்த நடைபாதை கம்பிகள் மற்றும் ஆற்றில் அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் கூத்தபாடி ஊராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
  வெள்ளப் பெருக்கின்போது நீர் சூழப்பட்ட குடியிருப்புப் பகுதியில் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பின. கர்நாடக அணைகளிலிருந்து வரும் நீரின் அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
  7-ஆவது நாளாகத் தடை: காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் 7-ஆவது நாளாகத் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல் பகுதிகளான பிரதான அருவி செல்லும் பகுதி, நாகர்கோவில், முதலைப் பண்ணை, ஊட்டமலை, நாடார் கொட்டாய் பகுதியில் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai