கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பெய்து வரும் தொடர்ந்து மழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பெய்து வரும் தொடர்ந்து மழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், நீர் நிலைகள் வறண்டன. நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்ததன. இதனால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டன. கால்நடைகளுக்கு போதுமான தீவனம் கிடைக்காத நிலையில், அவற்றை குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு கால்நடை வளர்ப்போர் தள்ளப்பட்டனர். குடிநீர் முறையாக கிடைக்காததால் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். குடிநீருக்காக நீண்ட தொலைவு பயணிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில், பருவ மழைக்கு முன் தயாராகும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை குடிமராமத்து பணிகளை மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்தது. நீர் நிலைகளில் மழைநீரை சேமிக்கும் வகையில் அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் 10 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.5 லட்சம் மதிப்பில் தலா 10 ஏரிகள் என மொத்தம் 100 ஏரிகள் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நீர்வரத்து கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டதால் சின்னேரி, மாசி ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி, பெரிய ஏரி என அழைக்கப்படும் படேதலால் ஏரி மற்றும் பல்வேறு நீர் நிலைகளுக்கு மழைநீர் தடையின்றி செல்கிறது. 15 ஆண்டுகளாக வறண்டு காணப்பட்ட மாசி ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அதன் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 
கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் எல்லை பகுதிகளில் மழை பெய்து வருவதால், வேப்பனஅள்ளியை அடுத்து பாயும் மார்கண்டேயன் நதியில் வெள்ளோட்டம் அதிகரித்தன. மார்கண்டேயன் நதிதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குப்பச்சிபாறை தடுப்பணையிலிருந்து மாரசந்திரம் வழியாக பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
கிருஷ்ணகிரி அருகே முட்டை அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. சுற்றுச் சுவர் அருகே உள்ள மின்கம்பமும் சாய்ந்தது.  மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால், குடியிருப்பு வாசிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரையில் பெய்த மழையளவு(மில்லி மீட்டரில்): கிருஷ்ணகிரி - 97.2, ஒசூர்-60, போச்சம்பள்ளி - 58.2, ராயக்கோட்டை - 57, ஊத்தங்கரை - 45, நெடுங்கல் - 40.2, பெனுகொண்டாபுரம் - 37.4, தேன்கனிக்கோட்டை - 34, பாரூர் - 28, அஞ்செட்டி - 10.7. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com