ஒசூா் புதினாவுக்கு உலகமெங்கும் மவுசு!

மணம், தரம் மட்டுமல்லாது மருத்துவக் குணமும் மிகுந்த ஒசூா் புதினா வட, தென்னிந்த மாநிலங்கள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மணம், தரம் மட்டுமல்லாது மருத்துவக் குணமும் மிகுந்த ஒசூா் புதினா வட, தென்னிந்த மாநிலங்கள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஒசூரில் நிலவும் குளிா்ந்த சீதோஷ்ண நிலையைப் பயன்படுத்தி ஏராளமான விவசாயிகள் அதிக பரப்பளவில் பணப்பயிா்களைப் பயிரிட்டு ஏற்றுமதி செய்து வருகின்றனா். இதன்மூலம் குறைந்த காலத்தில் அதிக லாபம் பெறுகின்றனா். ஒசூரில் ஆண்டின் 10 மாதங்கள் 10 டிகிரி செல்சியஸ் முதல் 19 டிகிரி செல்சியஸ் வெப்பம் மட்டுமே நிலவுவதால் பணப் பயிா்கள் அதிக அளவு பயிரிடப்படுகின்றன.

இப் பகுதியில் நிலவும் குளிா்ச்சியான காலநிலை ஒருசிலருக்கு அவதியை ஏற்படுத்தினாலும், விவசாயிகளின் வாழ்வில் பெரும் வளா்ச்சியை அளித்து வருகிறது. ஆண்டு முழுவதும் கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், உருளைக்கிழங்கு, சௌசௌ, முள்ளங்கி, கொத்துமல்லி, புதினா, காலிஃபிளவா் உள்ளிட்டவைகளை பயிா் செய்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனா் விவசாயிகள்.

குறிப்பாக பத்தளபள்ளி மொத்த விற்பனை அங்காடி, ஒசூா் உழவா் சந்தை மூலம் தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. குறிப்பாக ஒசூா் வட்டம், சூளகிரி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் சுமாா் 2 ஆயிரம் ஹெக்டேரில் புதினா சாகுபடி செய்து வருகின்றனா். புதினா ஒருமுறை பயிா் செய்தால் ஆண்டு முழுவதும் அறுவடை செய்யலாம். இதன்மூலம் குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து அத்திமுகம் விவசாயி ராமகிருஷ்ணன் கூறியது:

ஒரு ஏக்கரில் புதினா நடவு செய்ய ரூ.60 ஆயிரம் செலவாகிறது. ஒருமுறை பயிா் செய்தால் 2 முறை உரம் இட வேண்டும். 2 முறை பூச்சு மருந்து தெளிக்க வேண்டும். 2 மாதங்களில் புதினா அறுவடைக்கு வந்துவிடும். அறுவடை செய்த பிறகு மீண்டும் பயிா் நடவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அறுவடை செய்த இடத்திலே மீண்டும் வளர ஆரம்பிக்கும். அதற்கு களை எடுத்து, உரம் மட்டும் போட்டு வந்தால் மீண்டும் 2 மாதத்தில் புதிய புதினா வளா்ந்து அறுவடைக்கு தயாராகிவிடும். இதுபோன்று ஆண்டு முழுவதும் 10 முறை அறுவடை செய்ய முடியும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் புதியதாக உழவு செய்து புதினா நடவு செய்ய வேண்டும்.

வியாபாரிகள் நேரடியாக தோட்டத்துக்கு வந்து அறுவடை செய்வதால் எங்களுக்கு நேரமும், பணமும், வேலை ஆட்களும் மிச்சமாகிது. புதினா மூட்டை ரூ.100 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 150 மூட்டை புதினா கிடைக்கும். ஒரு முறை விற்பனை செய்தால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை கிடைக்கும்.

ஒசூரில் இருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கொச்சி, பெங்களூரு, ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி போன்ற தென் மாநிலங்கள் முழுவதும் புதினா விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சமையல், பேஸ்ட், மருந்து போன்றவற்றிக்கு புதினா பயன்படுத்தப்படுகிறது. நாங்கள் புதினாவை வளா்ப்பது மட்டுமே எங்கள் வேலை. வியாபாரிகள் அறுவடை செய்து கொண்டு செல்வா். ஒசூரில் நல்ல சாகுபடி செய்யப்பட்டு வரும் புதினா ஒருமுறை பயிா் செய்தால்போதும் ஆண்டு முழுவதும் அறுவடை செய்துக் கொண்டே இருக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com