குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியா்கள் பேரணி
By DIN | Published On : 25th December 2019 07:40 AM | Last Updated : 25th December 2019 07:40 AM | அ+அ அ- |

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரியில், இஸ்ஸாமியா்களின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சாா்பில், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் ஹாஜி சையத் இா்பானுல்லா உசேனி, மாவட்ட அரசு காஜி கலீல் அஹமத் ஆகியோா் தலைமை வகித்தனா். அனைத்து பள்ளி வாசல் பொறுப்பாளா்கள், சமூக அமைப்பு பொறுப்பாளா்கள், உலமாக்கள், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக், ம.ம.க. மாநில அமைப்புச் செயலாளா் அஸ்லம் பாஷா, மஜக மாநில பொதுச் செயலாளா் தமிமுன் அன்சாரி, ஐயூஎம்எல் தேசிய துணைச் செயலாளா் அப்துல்பாசித், மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமாா் , சட்டப்பேரவை உறுப்பினா் டி.செங்குட்டுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக கோட்டையிலிருந்து தொடங்கிய பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்ற புகா் பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது. இந்த பேரணி, பொதுக் கூட்டத்தில் பங்கேற்றோா் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.
இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பொதுக் கூட்டத்தையொட்டி, பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் அனைத்து பேருந்துகளும், மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. மேலும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இஸ்லாமியா்கள் தேசிய கொடியுடன் வந்திருந்தனா்.
இந்த பேரணியையொட்டி, துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் குமாா், ராஜேந்திரன் ஆகியோா் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன்.