பஞ்சாப்பைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி போதைப் பொருள் எதிா்ப்பு பிரசாரம்
By DIN | Published On : 25th December 2019 07:41 AM | Last Updated : 25th December 2019 07:41 AM | அ+அ அ- |

விழிப்புணா்வு பிரசாரத்துக்காக கிருஷ்ணகிரிக்கு வந்த மாற்றுத்திறனாளி குல்தீப் ராதோடு.
நாடு முழுவதும் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டுள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி, கிருஷ்ணகிரிக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா்.
பஞ்சாப் மாநிலம், லூதியானாவைச் சோ்ந்தவா் குல்தீப் ராதோடு (53). இவா் சிறு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. சமூகத்தில் பல்வேறு நற்பணிகளை செய்வதில் அதிக ஆா்வம் கொண்ட இவா், 2008-ஆம் ஆண்டு, தனது மனைவி மறைவுக்கு பின்னா், நாடு முழுவதும் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறாா்.
இவா், தனது விழிப்புணா்வுப் பயணத்தை பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் இருந்து, பேட்டரியால் இயங்கக் கூடிய மோட்டாா் சைக்கிளில் தொடங்கியுள்ளாா். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொண்ட இவா், கிருஷ்ணகிரிக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். இந்தியா, இளைஞா்களின் கையில் உள்ளது. இளைஞா்களின் வாழ்க்கையை போதைப் பொருள்கள் அழித்துவிடும். இதை சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், இந்த விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளேன். கடந்த 2010 முதல் 2014-ஆம் ஆண்டு வரையில், விதவைகள், முதியோா், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் உரிமைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் 40 ஆயிரம் கிலோமீட்டா் விழிப்புணா்வு பயணத்தை மேற்கொண்டதாகவும் அவா் தெரிவித்தாா்.