போலி தங்க நகைகளுக்கு வங்கிக் கடன் வழங்க உதவிய நகை மதிப்பீட்டாளர் கைது
By DIN | Published On : 02nd February 2019 03:28 AM | Last Updated : 02nd February 2019 03:28 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், போலி நகைகளுக்கு கடன் வழங்க உதவிய நகை மதிப்பீட்டாளரை, போலீஸார் கைது செய்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சி.நாராயண ராவ் (29) மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகளை சோதனை செய்த போது, அதில் போலி நகைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
அதில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பிரகாஷ் மனைவி தேவிகா (38), கடந்த 2013 முதல் 2018-ஆம் ஆண்டு வரை நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தார். அந்த காலக்கட்டத்தில், அவர் வாடிக்கையாளர்கள் பலரிடம் போலி நகைகளை வாங்கிக் கொண்டு கடன் வழங்க உதவியுள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டப் பொருளாதார குற்றப் பிரிவுக்கு கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
அதன்படி, மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில், நகை மதிப்பீட்டாளர் தேவிகா, வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து போலி நகைகளை பெற்றுக் கொண்டு ரூ.32.04 லட்சம் கடன் வழங்க உதவியது தெரியவந்தது. இதையடுத்து, தேவிகாவை கைது செய்த போலீஸார், இது தொடர்பாக 27 வாடிக்கையாளர்களை தேடி வருகின்றனர்.