தைப்பூச திருவிழா: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேய சுப்பிரமணி சுவாமி கோயிலில் ஜன.14-ஆம் தேதி தைப்பூச திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத்தையொட்டி திங்கள்கிழமை   சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,  ஆராதனைகள் நடைபெற்றன. 
பால்குடம்,  மயில் காவடி, மலர்க் காவடி, பால் காவடி என பல்வேறு வகையான காவடிகள் எடுத்தும்,  அலகு குத்தியும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவு செய்தனர்.  கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து  சுவாமி தரிசனம் செய்தனர்.  தைப்பூசத்தையொட்டி, மாட்டுச் சந்தையும்  திங்கள்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி கூடுதலாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 
ஒசூரில்...
தைப்பூச  திருவிழாவை முன்னிட்டு ஒசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள  முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன. 
ஒசூர்  பெரியார் நகர் முருகன் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுவாமிக்கு அபிஷேக,   ஆராதனைகள் நடந்தன.  அதிகாலை  முதல் பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.  
ஒசூர் ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதி,  சூளகிரி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள முருகன் சன்னதி,  முனீஸ்வர் நகரில் உள்ள முருகன் சன்னதி,  உத்தனப்பள்ளி அகரம் முருகன் கோயில்,  ராயக்கோட்டை வஜ்ரநாதேஸ்வரர் தீர்த்தத்தில் உள்ள முருகன் கோயில், கெலமங்கலம் சின்னட்டி பாலமுருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து
கொண்டனர்.
அகரம் முருகன் கோயிலில் பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டது.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரையை அடுத்த வண்டிக்காரன்கொட்டாய்  கிராமத்தில்  தைப்பூசத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அதிகாலை முதல் முருகர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார,  அபிஷேக ஆராதனை  நடைபெற்றன.   தொடர்ந்து  காவடி வீதி உலா, தீபாராதனை, காவடியாட்டம் நடைபெற்றது. இதில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்நாட்டார்
தண்டாயுதம்,  ஊர்க் கவுண்டர் தவமணி,  முன்னாள் இளைஞர் நற்பணி  மன்றத் தலைவர் துரைசாமி, வையாபுரி, கோயில் பூசாரி தண்டாயுதம்  மற்றும் ஊர்  பொதுமக்கள், அகமுடையார் நலச் சங்க இளைஞர்கள்  செய்திருந்தனர்.
போச்சம்பள்ளியில்...
தேவீரஅள்ளி கருமலை ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
போச்சம்பள்ளி அடுத்த தேவீரஅள்ளி கருமலை குன்றின் மேல் எழுந்தருளியுள்ள  ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா  நடைபெற்றது.
இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,  ஆராதனை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com