படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு முகாம்
By DIN | Published On : 05th July 2019 08:17 AM | Last Updated : 05th July 2019 08:17 AM | அ+அ அ- |

ஊத்தங்கரையை அடுத்த தகரப்பட்டி கிராமத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கிருஷ்ணகிரி வேளாண் இணை இயக்குநர் (பொ) பிரதீப்குமார் சிங் தலைமை வகித்து, படைப்புழு தாக்குதல், அதன் வாழ்க்கை சுழற்சி முறை பற்றி எடுத்துரைத்தார். வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத் தலைவர் சுந்தர்ராஜன் படைப்புழு தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி கூறினார். வேளாண் உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு அறிவழகன் ஒருங்கிணைந்த மேலாண்மை பற்றி கூறினார். இதில், படைப்புழு தாக்குதல் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து காணொலிக் காட்சி காண்பிக்கப்பட்டது.
இம்முறையில் கோடை உழவு செய்வது, விதை நேர்த்தி, வேப்பம் புண்ணாக்கு இடுதல் (ஹெக்டேருக்கு 250 கிலோ), வேப்ப எண்ணெய் 2 மி.லி. தெளிப்பு, மெட்டாரைசியம் 80 கி. பயிர் வளர்ந்த பின் ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளித்தல் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. வேளாண் அலுவலர் பிரபாவதி படைப்புழுக்களை கட்டுப்படுத்த அரிசி தவிடு 10 கிலோ, வெல்லம் 2 கிலோ லார்வின் பூச்சிமருந்து அரை கிலோ ஆகியவற்றை கலந்து உருண்டைகளாக பிடித்து வயல் முழுவதும் வைத்தால், படைப்புழுக்கள் கவர்ந்திழுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன என்றார். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். வேளாண் உதவி அலுவலர் தமிழ்வாணன் நன்றி கூறினார்.