மாற்றுத் திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் விழிப்புணர்வு
By DIN | Published On : 05th July 2019 08:17 AM | Last Updated : 05th July 2019 08:17 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்டக் கல்வி அலுவலர் சத்தியசீலன் கொடியசைத்து தொடங்கி
வைத்தார்.
பழைய பேட்டை, காந்தி சிலை, வட்டச் சாலை வழியாக சென்ற பேரணி பள்ளி வளாகத்திலேயே நிறைவு பெற்றது. இந்த நிகழ்வுக்கு உதவி திட்ட அலுவலர் நாராயணா தலைமை வகித்தார். மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சூசைநாதன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து, பார்வைக் குறைபாடு, கை, கால் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு, ஆட்டிசம், கற்றல் குறைபாடு, மூளை முடக்கு வாதம் போன்ற 21 வகையான மாற்றுத் திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் வழங்கும் பொருட்டு சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த முகாமானது ஜூலை 8-ஆம் தேதி கிருஷ்ணகிரியிலும், கெலமங்கலத்தில் 9-ஆம் தேதியும், பர்கூரில் 10-ஆம் தேதியும், ஊத்தங்கரையில் 12-ஆம் தேதியும், சூளகிரியில் 15-ஆம் தேதியும், காவேரிப்பட்டணத்தில் 16-ஆம் தேதியும், வேப்பனஅள்ளியில் 17-ஆம் தேதியும், மத்தூரில் 18-ஆம் தேதியும், ஒசூரில் 19-ஆம் தேதியும் என அந்தந்த வட்டார வள மையங்களில் நடைபெறுகிறது.
இதில், தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் 5 புகைப்படங்கள், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பள்ளிச் சான்று ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். முகாமில் பங்கேற்போருக்கு பயணப்படி, தேநீர், மதிய உணவு உள்ளிட்டவைகள் வழங்கப்படும்.
ஊத்தங்கரையில்...
வட்டார மேற்பார்வையாளர் சங்கர் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் மாதேஸ்வரி முன்னிலை வகித்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேரணியில் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவியர் மற்றும் ஊராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணி கல்லாவி சாலை வழியாக முக்கிய வீதிகளில் சென்று பள்ளியில் முடிவடைந்தது.