கிருஷ்ணகிரியில் ஜல்சக்தி அபியான் திட்டம்: கண்காணிப்பு அறை திறப்பு
By DIN | Published On : 08th July 2019 09:52 AM | Last Updated : 08th July 2019 09:52 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தில் நீர் மேலாண்மை கண்காணிப்பு அறை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் மேலாண்மை இயக்கம் குறித்து ஜூலை 8 முதல் 10-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மத்திய அரசின் கூடுதல் செயலாளர், இயக்குநர்கள், பொறியியல் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்சக்தி அபியான் - நீர் மேலாண்மைத் திட்டப் பிரிவு கண்காணிப்பு அறையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் திறந்துவைத்தார்.
நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கிருஷ்ணகிரியில் உள்ள 20 பிர்காவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், மழைநீர் மூலம் புதுப்பிக்கும் பணிகள், பழமையான ஏரி, குளங்களைப் புதுப்பித்தல் போன்ற பணிகளைக் கண்காணிக்கும் வகையில் நீர் மேலாண்மை திட்டப் பிரிவு கண்காணிப்பு அறை திறப்பட்டுள்ளது.
திட்ட இயக்குநர் லோகேஸ்வரி, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.