சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பி.எம்.சி. டெக் கல்லூரி மற்றும் அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கம் இணைந்து நடத்தும் 8-ஆவது புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 
  இதுகுறித்து புத்தக கண்காட்சி ஏற்பாட்டுக் குழு செயலாளர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் சீனிவாசுலு, இணைச் செயலாளர் அரிச்சந்திரன் ஆகியோர் கூட்டாக புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ஒசூர் காமராஜ் காலனியில் உள்ள கே.ஏ.பி. திருமண மண்டபத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழா, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகர் கண்காட்சியைத் தொடக்கி வைக்கிறார்.
  கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார், ஒசூர் எம்.எல்.ஏ. சத்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் புத்தக அரங்கைத் தொடக்கி வைக்கின்றனர்.
  பின்னர், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் சிறப்புரையாற்றுகிறார். புத்தகக் கண்காட்சி வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் மாலை 6 மணி முதல் கலை நிகழ்ச்சிகள், கருத்துரைகள் நடைபெறும். நாள்தோறும் ஒரு தலைப்பில், பிரபல பேச்சாளர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர். கடந்த ஆண்டு 12 நாள்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில், 60 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ரூ. 60 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகின. 30,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்றார்.
  மேலும் இந்தப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, 3,000 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் ஒன்று கூடி ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை பி.எம்.சி.டெக். கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
  முன்னதாக, புத்தக கண்காட்சி பிரசார வாகனத்தை ஒசூர் வட்டாட்சியர் முத்துப்பாண்டி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai