தேன்கனிக்கோட்டை அருகே மேலும் 24 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்; 2 மாதங்களில் 80 துப்பாக்கிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கேட்பாரற்றுக் கிடந்த 24 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கேட்பாரற்றுக் கிடந்த 24 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை 80 நாட்டுத் துப்பாக்கிகள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தேன்கனிக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கீதா தலைமையில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு போலீஸார் சார்பில் கிராமப் பகுதிகளில் தண்டோரா மூலமும், ஒலிபெருக்கி மூலமும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ஏராளமானோர் தங்களிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை ஆங்காங்கே வீசி வருகின்றனர்.
இந் நிலையில், தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் சரவணன் உதவி ஆய்வாளர் கலைவாணி, நக்ஸல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர் வேலுச்சாமி உள்ளிட்டோர் திப்பசந்திரம் கிராமம் வழியாக புதன்கிழமை ரோந்து பணி சென்றனர்.
அப்போது வனப் பகுதியில் முனீஸ்வரன் கோயில் அருகில் கேட்பாரற்று 24 நாட்டுத் துப்பாக்கிகள் கிடந்தன. அதைக் கண்ட போலீஸார் துப்பாக்கிகள் அனைத்தையும் கைப்பற்றினர்.
மேலும் அப்பகுதியில் யாரும் தென்படவில்லை. இதைத் தொடர்ந்து அனைத்துத் துப்பாக்கிகளையும் தேன்கனிகோட்டை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
இதுவரை 80 துப்பாக்கிகள் பறிமுதல்: கடந்த ஜூன் மாதம் தேன்கனிகோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்ததாக உரிமம் இல்லாத 19 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸார் கைப்பற்றியிருந்தனர்.
அதேபோல அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த 27 நாட்டுத் துப்பாக்கிகளையும், தளி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 10 நாட்டுத் துப்பாக்கிகளையும் போலீஸார் இதுவரை பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த மாதம் போலீஸாரால் 56 நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட நிலையில், புதன்கிழமை மேலும் 24 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். மொத்தமாக இதுவரை 80 நாட்டுத் துப்பாக்கிகளை தேன்கனிக்கோட்டை சரக காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அனுமதியின்றி வைத்திருக்கும் நாட்டுத் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தால் தேவையின்றி விசாரணையில் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் பலர் துப்பாக்கிகளை வீசி செல்கின்றனர்.
இதனால் வனப் பகுதியிலும், வீதியிலும் வீசப்படும் நாட்டுத் துப்பாக்கிகளைக் கண்டறிந்து பறிமுதல் செய்யும் பணியில் போலீஸார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com