தொழில் முதலீடுகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் எம்.சி. சம்பத்

 தொழில் முதலீடுகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.


 தொழில் முதலீடுகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
வர்த்தகத்தை எளிதாக்குவது தொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒசூரில் சனிக்கிழமை நடைபெற்ற தொழில் முனைவோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை தொடக்கிவைத்து அவர் பேசியது:
தொழில் நிறுவனங்களிடையே வர்த்தகத்தை எளிதாக்குவது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் பயன் அளிக்கக் கூடியதாக இருக்கும். தனிநபர் வருமானத்தை உயர்த்தி அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் நோக்கில் தொலைநோக்குத் திட்டம் 2023-ஐ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
 உற்பத்தி சேவை, சுற்றுலா, உள்கட்டமைப்பு, மின்சாரம், சுற்றுசூழல், தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனங்கள் ஐவுளி, கனரக பொறியியல் பொருள்களுக்கான உற்பத்தி இலக்கை நோக்கி தமிழகம் பயணிக்கிறது.திறன் வாய்ந்த மனித வளத்தை கொண்ட மாநிலமாகவும், தொழில் வளர்ச்சிக்கும், தொழில் முதலீடு செய்வதற்கும் உகந்த மாநிலமாகவும், பாதுகாப்பான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.
மேலும் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் சேவை துறையில் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்த 2015-ஆம் ஆண்டில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
தமிழக அரசு மத்திய பாதுகாப்பு துறையுடன் இணைந்து சென்னை, திருச்சி, சேலம், கோயமுத்தூர் மற்றும் ஒசூர் ஆகிய பகுதிகளை இணைத்து பாதுகாப்பு தொழில் பெருவழி தடம் திருச்சியில் தொடக்கி வைக்கப்பட்டது. இத் திட்டத்தின் வாயிலாக  ரூ. 3 ஆயிரத்து 123 கோடி அளவிலான முதலீட்டு திட்டங்கள் ஈர்க்கவும் 10 - ஆண்டுகளில் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக ஒசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. 
தமிழ்நாடு வர்த்தக எளிதாக்கல் சட்டம் 2018 இணையம் அடிப்படையிலான ஒற்றை சாளர முறை ஆகிய இரண்டு முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு தொழில் துறையில் ஒரு மைல் கல்லாகும். மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டு துறையால் 2017-18 ஆம் ஆண்டில் எளிமையாக தொழில் துவங்குவதில் 90.60 மதிப்பெண் பெற்று சாதனை வரிசையில் தமிழகம் முதல் இடம் பெற்றுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள எளிமையான முறையில் தொழில் தொடங்குவது தொடர்பாக தொழில் நிறுவனங்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
முன்னதாக குருபரபள்ளியில் ரூ. 4 ஆயிரம் கோடி அமைக்கப்பட்டு வரும் சிப்காட் 1 கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்,  பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சிப்காட் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
கருத்துக் கேட்பு கூட்டத்தில் தொழில் துறை முதன்மைச் செயலாளர் என். முருகானந்தம், சிப்காட் மேலாண்மை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொழில் துறை துணைச் செயலர் பாலசுப்பிரமணி, முன்னாள் அமைச்சர்பாலகிருஷ்ணன், எம்எல்ஏ ராஜேந்திரன், முன்னாள் எம்பி அசோக்குமார், சிப்காட் திட்ட அலுவலர் வி.வெங்கடாசம், மாவட்ட தொழில் மைய மேலாளர்கள் பிரசன்ன பாலமுருகன், ஒசூர் மோகன், ஹோஸ்டியா சங்கத்தின் தலைவர் வேல்முருகன், செயலாளர் வடிவேல், பொருளாளர் ஸ்ரீதர், முன்னாள் தலைவர்கள் ஞானசேகரன், தனசேகரன், சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com