மத்தூர் அருகே மழைநீர் உறிஞ்சுக் குழிகள்: பஞ்சாயத்து ராஜ் பயிற்சி நிறுவன அலுவலர்கள் ஆய்வு
By DIN | Published On : 15th July 2019 10:01 AM | Last Updated : 15th July 2019 10:01 AM | அ+அ அ- |

மத்தூர் அருகே உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் மழைநீர் உறிஞ்சுக் குழிகள் அமைக்கப்பட்டதை பஞ்சாயத்து ராஜ் பயிற்சி நிறுவனத்தின் அலுவலர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஈச்சங்காடு கிராமத்தில் உள்ள ஏரியில் 2018-2019-ஆம் ஆண்டு நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.40 லட்சத்தில் 3,973 பயனாளிகளைக் கொண்டு இரண்டு மழைநீர் சேகரிப்பு உறிஞ்சுக் குழிகள் அமைக்கப்பட்டன.
இந்தப் பணிகளை ஹைதராபாத்தைச் சேர்ந்த தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் பயிற்சி நிறுவனத்தின் ஆலோசகர் ரங்காச்சார்யலு, ஆராய்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பயனாளிகளிடம் பேசியது: இன்றைய சூழ்நிலையில் தண்ணீர் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைநீர் சேகரிப்பு உறிஞ்சுக் குழிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி, நீர் மேலாண்மை குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், அமைக்கப்பட்டுள்ள இந்த உறிஞ்சுக் குழிகளை விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அவ்வப்போது கண்காணித்துப் பராமரிக்க வேண்டும் என்றார்.
அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் லோகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர்கள் ஜாகீர் உசேன், கல்யாண சுந்தரம், செயற்பொறியாளர்கள் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழரசன், துரைசாமி, ஒன்றியப் பொறியாளர் சுமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.