ராயக்கோட்டையில் தீமிதி திருவிழா
By DIN | Published On : 24th July 2019 09:41 AM | Last Updated : 24th July 2019 09:41 AM | அ+அ அ- |

ராயக்கோட்டை துர்க்கை மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் கிருஷ்ணகிரி சாலையில் ஸ்ரீ துர்க்கை மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாதத்தில் தீ மிதி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா கடந்த ஜூலை 21 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு இரவு சக்தி கரகம் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. 22 -ஆம் தேதி காலை கலச பூஜை, மகா மங்களாரத்தி நடந்தது. இரவு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ஸ்ரீ வஜ்ரநாதேஸ்வரர் கோயிலில் இருந்து, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மலர்களால் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு தீமிதி விழா தொடங்கியது. இதில் முதலில் சுவாமியைத் தூக்கியவாறு பூசாரிகள் இறங்கி தீ மிதித்தனர்(படம்). அதைத் தொடர்ந்து ஆண், பெண் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தீமிதி விழாவைத் தொடர்ந்து உற்வச மூர்த்தி நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. இரவு இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. முன்னதாக திங்கள்கிழமை இரவு மழை வேண்டி யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ராயக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.