முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 30th July 2019 09:25 AM | Last Updated : 30th July 2019 09:25 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அருகே தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் சமையில் எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து பலமணி நேரம் பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், பாண்டமங்கலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அஜய்குமார் (25) என்பவர் சமையல் எண்ணெய் ஏற்றிய டேங்கர் லாரியை நெல்லூரிலிருந்து நாமக்கல் நோக்கி ஓட்டி வந்து கொண்டிருந்தார். கிருஷ்ணகிரியை அடுத்த குருவிநாயனப்பள்ளி மலைப் பாதையில் தமிழ்நாடு - ஆந்திரம் எல்லையில் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியிலிருந்த சமையல் எண்ணெய் முழுவதும் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சாலையில் கொட்டியிருந்த எண்ணெய்ப் பசையை அப்புறப்படுத்தி, விபத்துக்குள்ளான லாரியை கிரேன் உதவியுடன் மீட்டனர். இந்த விபத்தினால், கிருஷ்ணகிரி - ஆந்திர மாநிலம் குப்பம் இடையே காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து, கந்திகுப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.