முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
வனவிலங்குகளின் தாகம் தீர்த்த ஒசூர் கோட்ட வனத்துறை
By DIN | Published On : 30th July 2019 09:00 AM | Last Updated : 30th July 2019 09:00 AM | அ+அ அ- |

ஒசூர் வனக்கோட்டம் சார்பில் வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் வன விலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து நீர் அருந்தி செல்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சுற்றி வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இங்கு யானைகள், எருமைகள், மான்கள் உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகள் நீர் அருந்துவதற்காக அடிக்கடி அருகில் உள்ள கிராமங்களுக்கு வந்து செல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
அப்போது மான்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வந்தன. மேலும், தண்ணீரைத் தேடி கிராமங்களுக்கு வரும் யானைகள் அங்குள்ள விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதையடுத்து வனப்பகுதியிலிருந்து தண்ணீருக்காக வன விலங்குகள் வெளியேறுவதைத் தடுப்பதற்காக வனத்துறை சார்பில் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டன.
அந்தத் தண்ணீர் தொடடிகளில் வனத்துறை சார்பில் தினசரி நீர் நிரப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நீரை யானைகள், மான்கள், காட்டு எருமைகள் வந்து தினசரி அருந்தி செல்கின்றன. ஒசூர் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட தளி, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனப்பகுதிகளில் வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது.
பகல், இரவு நேரங்களில் யானைகள், மான்கள், எருமைகள் கூட்டம் கூட்டமாக வந்து தொட்டிகளில் தண்ணீரை அருந்திச் செல்வது தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து வனத் துறையினர் கூறுகையில் வனப் பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதன் மூலம் வன விலங்குகள் தண்ணீருக்காக கிராமங்களுக்கு வருவது பெருமளவு குறைந்துள்ளது. வன விலங்குகள் வந்து தண்ணீர் அருந்தி தாகம் தீர்த்து செல்வது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என்றனர்.