விருப்பத்துக்கு மாறாக கிடைப்பதும் வெற்றியே: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

விரும்பியதை அடைவதும் மட்டும் வெற்றி அல்ல; விருப்பத்துக்கு மாறாக கிடைப்பதும் வெற்றியே என்றார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.


விரும்பியதை அடைவதும் மட்டும் வெற்றி அல்ல; விருப்பத்துக்கு மாறாக கிடைப்பதும் வெற்றியே என்றார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.
ஒசூர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற 14-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியது: உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் 25 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் 49 சதவீதமாக உள்ளது. மாணவர்கள் பயின்ற படிப்பு சமுதாயத்துக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் பயன்பட வேண்டும். விரும்பியதை அடைவதே மட்டுமே வெற்றியாக கருதுகிறோம். ஆனால், விருப்பத்துக்கு மாறாக கிடைப்பதும் வெற்றியே என்பது எனது அனுபவம்.
நான் பிறந்தது குக்கிராமம். எனது வயது சிறார்கள் நகரத்துக்கு சென்று விடுதியில் தங்கி நகரப் பள்ளிகளில் படித்து வந்தனர். நானும் அதுமாதிரி படிக்க வேண்டும் விரும்பினேன். ஆனால், இயலாது சூழ்நிலை விரும்பியது கிடைக்கவில்லை. கிடைத்த கிராமப் பள்ளியில் உற்சாகத்துடன் படித்தேன்.
முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்று கிணத்துகடவு பள்ளியில் உயர் கல்வியில் சேர்ந்தேன். பலரும் உயர்நிலைப் பள்ளிக்கு மிதிவண்டியில் சென்று படித்தபோது நானும் மிதி வண்டியை விரும்பினேன். ஆனால், விரும்பியது கிடைக்கவில்லை. கிடைத்து நடைபயணம். உனக்கும் கீழே உள்ளவர் கோடி என கண்ணதாசன் பாடல் வரியை பொருள் உணர்ந்து வரப்புகள் வழியே நடப்பதை விரும்பி ஏற்றுக் கொண்டேன். 
பள்ளியில் நடந்ததை நினைத்துப் பார்த்தும், புதியதாக சிந்தித்தும் நடந்து பழகினேன். உண்மையில் உயரம் தொடும் நாள்களுக்கு எனக்கு உரம்போட்ட நாள்கள் அவை. தமிழ் பிரியனான நான் கல்லூரியில் நுழைகையில் விரும்பியது தமிழ் வழிக் கல்வி. கிடைத்தது பொள்ளாச்சியில் ஆங்கில வழிக் கல்வி. மறுபடியும் கிடைத்ததை விரும்பினேன். தங்கப்பதக்கத்துடன் தேறினேன். பொறியியல் படிக்க ஐஐடியில் படிக்க விரும்பினேன். கிடைத்தது ஜேசிடி. இங்கும் கிடைத்தை விரும்பினேன். 
படிப்பு முடித்து ஆசிரியர் வேலைக்கு விரும்பினேன். ஆனால், கிடைத்தது விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணி. திரும்பவும் கிடைத்ததை விரும்பினேன். கிடைத்ததை விரும்பி செய்யத் தொடங்குவதும் வெற்றியே. 80 க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை உருவாக்கும் பணியில் நான் பங்குபெற முடிந்தது. சந்திரயான் 2 திட்டத்தில் நிலவுக்கு செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பும் பணி தொடர விரும்பினேன். ஆனால் கிடைத்தது பணிநிறைவு. எனது வாழ்வில் நான் நினைத்தது கிடைக்கவில்லை. எனக்கு கிடைத்த அனைத்தையும் விரும்பினேன். விரும்பியதை அடைவது மட்டுமே வெற்றி அல்ல. கிடைத்ததை விரும்பினால் வெற்றியே என நம்புங்கள். மாணவர்கள் தமது கடமைகளை சரியாக  புரிந்து கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்றார். 
இந்த பட்டமளிப்பு விழாவுக்கு பெருமாள் மணிமேகலைப் பொறியியல் கல்லூரியின் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் பி.குமார் மற்றும் அறங்காவலர் பி.மலர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் துறை பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com