சுடச்சுட

  

  அகரம் அடுத்த கோடிப்புதூர் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
  இதில்  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
  போச்சம்பள்ளியை அடுத்த அகரம் அருகே கோடிப்புதூர் கிராமத்தில் 109 ஆண்டுகள் பழமைவாய்ந்த பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது.
  இக் கோயிலில் நிகழாண்டு வைகாசி மாத திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளும், 500-க்கும் மேற்பட்ட பன்றிகளும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான கோழிகளும் பலியிடப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இதில், கர்நாடகம், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
  கோயிலில் முக்கிய நிகழ்ச்சியான பரணை ஏறுதல் நிகழ்ச்சி மதியம் 12 மணிக்கு நடைபெற்றது.
  இதில் கோயில் முன் 7 பரணை கட்டப்பட்டு அதில் நான்கு பரணையில் ஆடுகளையும் மூன்று பரணைகளில் பன்றிகளையும் கட்டி வைத்திருந்தனர்.
  அப்போது பூசாரி கோயிலைச் சுற்றிவந்து பரணை மீது ஏறி பன்றியின்  வயிற்றை கிழித்து அதில் வாழைப்பழம் சேர்த்து ரத்தத்துடன் கலந்து சிறப்பு பூஜை செய்த பின்னர் பக்தர்களை நோக்கி வீசினார். அப்போது அங்கு கோயில் வளாகத்தில் கூடியிருந்த ஆண்களும் பெண்களும் மடியேந்தி பிரசாதத்தை பிடித்து உண்டனர்.
  இந்த பிரசாதத்தை குழந்தை இல்லாத பெண்கள் உண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பின்னர் ஆடுகளும், பன்றிகளும் பலியிட்டு உறவினர்களும், நண்பர்களும் விருந்து வைத்தனர். இதில் சேலம், மேட்டூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
  நாகரசம்பட்டி காவல் ஆய்வாளர் சின்னசாமி தலைமையில் 6 காவல் உதவி ஆய்வாளர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களும்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai