ராசிமணல் பகுதியில் அணை கட்டாவிட்டால் தமிழகம் பாலைவனமாகும்

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே ராசிமணல் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக அரசு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே ராசிமணல் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக அரசு புதிய அணை கட்டாவிட்டால் தமிழகம் பாலைவனமாகும் என தமிழக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் கடந்த 10-ஆம் தேதி முதல் "காவிரிக்கு மாற்று காவிரியே' என்ற முழக்கங்களோடு பூம்புகாரில் இருந்து கல்லெடுத்து திருச்சி, திருவாரூர், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகள் வழியாக தொடர் பேரணி சென்றனர்.  இக் குழுவினர் புதன்கிழமை ஒகேனக்கல் வந்தனர்.
பேரணி...
தமிழக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் வந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பின்னர்,  ஒகேனக்கல்லில் இருந்து கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு மத்திய நீர் ஆணையம் வரை வாகனப் பேரணி சென்றனர்.  பின்னர் அங்கிருந்து வனப் பகுதியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், ராசிமணல் பகுதிக்கு நடந்து சென்றனர்.
ராசிமணல் பகுதியில் 1961-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த காமராஜர், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக அப்போது அடிக்கல் நாட்டிய இடத்தைப் பார்வையிட்டனர்.
செங்கற்கள் ஒப்படைப்பு...
பின்னர்,  பூம்புகாரில்  இருந்து பூஜை செய்து எடுத்து வரப்பட்ட 30-க்கும் மேற்பட்ட செங்கற்களை ராசி மணல் பகுதியில் தமிழக அரசு அணை கட்டுவதற்காக அரசின் பிரதிநிதிகளான அஞ்செட்டி வட்டாட்சியர் செந்தில்குமார், அஞ்செட்டி வனச் சரக அலுவலர் ரவி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
அதையடுத்து,  சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.  தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் பாலைவனமாக உள்ளது.   கடந்த 7 ஆண்டுகளில் காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை முற்றிலுமாக இழந்துள்ளனர்.
அதேவேளையில்,  7 ஆண்டு காலமாக 1,000 டி.எம்.சி தண்ணீர் காவிரி ஆற்றின் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.
இதைத் தடுத்து ஆண்டுக்கு 200 டி.எம்.சி தண்ணீரைச் சேமித்து பயன்படுத்தும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டம்,  ராசிமணல் பகுதியில் அணை கட்டுவதற்கு  தமிழக அரசு முன்வர வேண்டும்.
கர்நாடக அரசு மேக்கேதாட்டில் புதிய அணை கட்டுவதை மத்திய அரசு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் தடுத்தி நிறுத்திட வேண்டும்.  ராசிமணல் பகுதியில் அணை கட்ட அனுமதி வழங்கிட வேண்டும்.
இதற்கு கர்நாடக அரசு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்.  இல்லாவிட்டால் தமிழக மக்கள், விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்.
தமிழக நீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நீரைப் பயன்படுத்தும் விதமாக ராசிமணலில் அணை கட்டினால் ஆண்டுக்கு 200 டி.எம்.சி தண்ணீர் தேக்கி வைக்கலாம்.  இல்லாவிட்டால், தமிழகம்  பாலைவனமாக மாறிவிடும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com