கிருஷ்ணகிரியில் மருத்துவர்கள் கண்டன ஊர்வலம்
By DIN | Published On : 18th June 2019 09:13 AM | Last Updated : 18th June 2019 09:13 AM | அ+அ அ- |

மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் மருத்துவர்கள் திங்கள்கிழமை கண்டன ஊர்வலம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு இந்திய மருத்துவச் சங்கத் தலைவர் ராஜசேகரன், செயலாளர் தனசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மருத்துவர்களுக்கு பணியின்போது உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், தேசிய அளவில் பாதுகாப்புச் சட்டம் இயற்றவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடைபெற்றது. காந்தி சாலை, வட்டச் சாலை வழியாக சென்ற ஊர்வலம், அரசு தலைமை மருத்துவமனை அருகே நிறைவடைந்தது.
ஒசூரில், மருத்துவர்கள், கருப்புப் பட்டை அணிந்து ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஒசூர் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு இந்திய மருத்துவர் சங்கத்தின் ஒசூர் கிளைத் தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில், பொருளாளர் விவேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மருத்துவர்களின் போராட்டத்தால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது பாதிக்கப்படவில்லை.
தருமபுரியில்...
பணி பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரி, தருமபுரியில் அரசு மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணிபுரிந்தனர்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அண்மையில் மருத்துவர்கள் தாக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை கோரி, நாடு முழுவதும் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக திங்கள்கிழமை மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அரசு மருத்துவர்கள் 300- க்கும் மேற்பட்டோர், தேசிய அளவில் பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி, கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், அரசு மருத்துவமனைகளில் வழக்கம்போல புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதேபோல, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒருசில தனியார் மருத்துவமனைகளில் மட்டும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.