ஆழ்துளைக் கிணறுகளில் நீர் இருந்தும் குடிநீருக்கு அலையும் கிராம மக்கள்

பர்கூர்  அருகே  பூசிநாயக்கனூர் வீரப்பன்கொட்டாய் கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் நீர் இருந்தும்,

பர்கூர்  அருகே  பூசிநாயக்கனூர் வீரப்பன்கொட்டாய் கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் நீர் இருந்தும்,  மின்மோட்டார் பழுது காரணமாக  கிராம மக்கள் குடிநீருக்காக அலையும்  நிலை ஏற்பட்டுள்ளது.
பர்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட  பூசிநாயக்கனூர் வீரப்பன்கொட்டாய் கிராமத்தில், 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயமே பிரதான தொழில். இந்தக் கிராம மக்களின் நலன் கருதி, கடந்த  2014 - 2015 - ஆம் ஆண்டில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. 2 ஆழ்துளைக் கிணறுகள், குடிநீர்த் தொட்டிகளும் அமைக்கப்பட்டன. இந்த ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள மின்மோட்டார்களில் பழுது ஏற்பட்டுள்ளதால்  குடிநீருக்காக தினமும் கிராம மக்கள் அலைந்துதிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து,  கிராம பொதுமக்கள் தெரிவித்தது:  எங்கள் கிராமத்தில், நிலத்தடி  நீர்மட்டம் நன்றாக உள்ளது. ஆழ்துளைக் கிணறுகளில்  நீர் இருந்தும், மின் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.  கிராம மக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டியானது இதுவரையில் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் இருந்தும், பயன்படுத்தாத முடியாத நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்து, அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர். 
மேலும், தங்கள் கிராமத்தின் அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாய்கள்  மூலம் மற்ற கிராமங்களுக்கு தண்ணீர் செல்லுகிறது. ஆனால், ஏங்களுக்கு  இதுவரையில் ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல ஆழ்துளைக் கிணறுகள் வறண்ட நிலையில்,  நீர் இருந்தும் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள இந்தக் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com