கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ரூ.5,850 கோடி வங்கி கடன் திட்ட அறிக்கை வெளியீடு

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 2019-2020 ஆண்டுக்கான ரூ.5,850 கோடி வங்கி கடன் திட்ட அறிக்கையை முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சார்பில் வெளியிடப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 2019-2020 ஆண்டுக்கான ரூ.5,850 கோடி வங்கி கடன் திட்ட அறிக்கையை முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சார்பில் வெளியிடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்தியன் வங்கி சார்பில் 2019-2020-ஆம் ஆண்டுக்கான ரூ.5,850 கோடி வங்கி கடன் திட்ட அறிக்கையின் முதல் பிரதியை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் வெளியிட அதை ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் கே.தாமோதரன் பெற்றுக் கொண்டார். 
இந்த நிகழ்வுக்கு முன்னோடி வங்கியின் மண்டல மேலாளர் ஆர்.திருமாவளவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் பேசியது: 
நபார்டு வங்கி தயாரித்த வளம் சார்ந்த கடன் திட்டத்தை பின்பற்றி கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.5,850 கோடி கடன் திட்டத்தில் விவசாயத்துக்கு 4,085 ஆயிரம் கோடியும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலுக்கு ரூ.890 கோடியும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், மரபுசார எரிசக்தி துறைக்கு ரூ.15 கோடியும், கல்வி கடனாக ரூ.102 கோடியும், வீட்டுக் கடனுக்கு ரூ.290 கோடியும் குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
மொத்த கடனளவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட வர்த்தக வங்கிகளின் பங்கு ரூ.194 கோடியாகவும், கிராம வங்கியின் (தமிழ்நாடு கிராம வங்கி) பங்கு 594 கோடியாகவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் பங்கு ரூ.16 கோடியாகவும் உள்ளது என்றார்.
கூட்டத்தில் நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் நஸ்ரீன் சலீம், இந்தியன் வங்கி முன்னோடி மேலாளர் ஜி.பாஸ்கரன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் கண்ணன், வேளாண் துறை இணை இயக்குநர் பிரதீப்குமார்சிங், மாவட்ட தொழில் வணிகத் துறை பொது மேலாளர் பிரசன்னா பாலமுருகன் மற்றும் அனைத்து வங்கி மேலாளர்கள், அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com