கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட இருவர் சாவு
By DIN | Published On : 02nd March 2019 09:12 AM | Last Updated : 02nd March 2019 09:12 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அருகே குருவிநாயனப்பள்ளியில் ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில் பச்சிளம் குழந்தை உள்பட இருவர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருவிநாயனப்பள்ளியைச் சேர்ந்த முருகன்-ஜெயா தம்பதியின் மகள் நாயகி (28). இவரது கணவர் சென்னகவுண்டர். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு இனியாஸ்ரீ (6) என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த இனியாவுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில், ஜெயா, அவரது மகள் நாயகி, பேத்தி இனியாஸ்ரீ மற்றும் பிறந்து 9 நாள்களே ஆன பெண் குழந்தை ஆகியோர் ஷேர் ஆட்டோவில், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டனர். ஆட்டோவை, அதே பகுதியைச் சேர்ந்த ரபீக் என்பவர் ஓட்டிச் சென்றார்.
குப்பம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பசவண்ணக் கோயில் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, கிருஷ்ணகிரியிலிருந்து குப்பம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த ஜெயா, பிறந்த 9 நாள்களே ஆன பெண் குழந்தை ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் ரபீக், நாயகி, இனியாஸ்ரீ ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள், பலத்த காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தகவல் அறிந்த போலீஸார், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து, கந்திகுப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.