தீ விபத்து நிகழ்ந்த ஜோதிடர் வீட்டிலிருந்து சிறிய ரக துப்பாக்கி பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே,  கடந்த சில நாள்களுக்கு முன்பு,  தீ விபத்து நிகழ்ந்த ஜோதிடர் வீட்டிலிருந்து சிறிய ரக துப்பாக்கியை போலீஸார்  திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி அருகே,  கடந்த சில நாள்களுக்கு முன்பு,  தீ விபத்து நிகழ்ந்த ஜோதிடர் வீட்டிலிருந்து சிறிய ரக துப்பாக்கியை போலீஸார்  திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரியை  அடுத்த சின்னமுத்தூர் கிராமத்தில்  வசித்து வருபவர் டான்(50).  பெங்களூருவைச் சேர்ந்த இவர்,  இந்தக் கிராமத்தில் தங்கி ஜோதிட தொழில் செய்து வந்தார்.  இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு  அமாவாசையையொட்டி பூஜை செய்த  அவர், வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றபோது அவரது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.
 வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முற்பட்டனர்.  தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியது. இந்த நிலையில், ஜோதிடர் வீட்டிலிருந்து எரிவாயு உருளை வெடித்தது. இதில், காவேரி  (50),  சௌந்தர் (23),  முனியப்பன் (28)  ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். தீக்காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் முனியப்பன்  ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அந்தக் கிராம மக்கள், ஜோதிடரை கைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இந்த நிலையில், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ஜோதிடர் வசித்துவந்த வீட்டை உடைத்து சேதப்படுத்தினர். அப்போது, அலமாரியில் இருந்த ஏர் பிஸ்டல்  என அழைக்கப்படும் சிறு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று ஜோதிடர் வீட்டிலிருந்து சிறிய ரக துப்பாக்கியை கைப்பற்றினர். 
இதுகுறித்து போலீஸார் தெரிவித்தது: ஜோதிடர் வீட்டில் கைப்பற்றியது ஏர் பிஸ்டல் என அழைக்கப்படும் சிறு ஆயுதமாகும்.  இந்த ரக ஆயுதத்துக்கு உரிமம் பெற வேண்டிய அவசியம் கிடையாது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு,  முன்னாள் ராணுவ வீரர் மூலம் ரூ.250 - க்கு இதை  ஜோதிடர் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com