ஒசூர் சட்டப் பேரவைத்தொகுதி இடைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் மனு நீண்ட இழுபறிக்கு பின்பு ஏற்பு
By DIN | Published On : 28th March 2019 09:08 AM | Last Updated : 28th March 2019 09:08 AM | அ+அ அ- |

ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ். ஜோதியின் வேட்புமனு நீண்ட இழுபறிக்குப் பின்பு ஏற்கப்பட்டது.
ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் மார்ச் 23-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. கடந்த திங்கள்கிழமை அதிமுக, திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதிமுக வேட்பாளர் எஸ். ஜோதி வேட்புமனு தாக்கல் செய்தபோது அவருடன் சேர்ந்து 10 பேர் உடனிருந்ததால் தேர்தல் விதிமீறல் என திமுக சார்பில் ஒசூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிமுக வேட்பாளர் மீண்டும் 2-ஆவது முறையாக குறிப்பிட்ட நபர்களுடன் சென்று தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து கடைசி நாளில் அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து ஒசூர் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விமல்ராஜ் மற்றும் மத்திய தேர்தல் பார்வையாளர் கல்யாண் சந்த் ஷமன் ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது திமுக வழக்குரைஞர் பாலாஜி, அதிமுக வேட்பாளர் ஜோதியின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என வாதிட்டார். அதனால் அவருடைய வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் எஸ்.ஏ. சத்யாவின் வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அந்த மனுவுக்கு எதிர்ப்பு இல்லை என்பதால் அவருடைய மனு முழுமையாகத் தேர்தல் விதிப்படி பூர்த்தி செய்யப்பட்டதாகத் தெரிவித்து மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
நீண்ட இழுபறிக்கு பின் மீண்டும் அதிமுக வேட்பாளர் ஜோதியின் வேட்புமனு மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது தேர்தல் அலுவலர் விமல்ராஜ் திங்கள்கிழமை அதிமுக வேட்பாளர் ஜோதி வேட்புமனு தாக்கல் செய்த போது 10 பேர் உடனிருந்தனர். இதை திமுக வழக்குரைஞர் ஆட்சேபனை தெரிவித்ததால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால், செவ்வாய்க்கிழமை மறுபடியும் அதிமுக வேட்பாளர் ஜோதி மனு தாக்கல் செய்தபோது தேர்தல் விதிமுறைக்கு உள்பட்ட நபர்கள் மட்டுமே உடனிருந்தனர்.
எனவே அந்த மனுவை ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்.
இதனைத் தொடர்ந்து பரிசீலனைக்கு ஏற்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடப்பட்டது. அவர்களுக்கு சின்னமும் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது.
ஒசூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்:
1.எஸ்.ஜோதி (அதிமுக) 2. எஸ்.ஏ.சத்யா (திமுக) 3. வா.புகழேந்தி (அமமுக) 4. ராஜசேகர் (நாம் தமிழர் கட்சி), 5. ஜெயபால் (ம.நீ.ம.) 6. தேவப்பா (சுயே) 7. தேவராஜ் (சுயே) 8. முருகன் (சுயே) 9. மாதேஸ்வரன் (சுயே) 10. அமீனுல்லா (சுயே) வேக்முனவர் (சுயே)
இந்த வேட்புமனு பரிசீலனையின்போது திமுக சார்பில் வேப்பனஅள்ளி எம்எல்ஏ பி. முருகன், திமுக வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலாளர் விஜயகுமார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் வா. புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகர், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஜெயபால், சுயேச்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...