பர்கூரில் தமிழ்நாடு - ஆந்திர மாநில போலீஸார் ஆலோசனை
By DIN | Published On : 28th March 2019 09:10 AM | Last Updated : 28th March 2019 09:10 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து, பர்கூரில் தமிழ்நாடு-ஆந்திர மாநில போலீஸார் ஆலோசனையை புதன்கிழமை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி, மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டமானது ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் உள்ளது. நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில், இரு மாநில அரசுகள் ஒருங்கிணைந்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன்படி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல், ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குப்பம் காவல் நிலைய போலீஸார் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பர்கூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு - ஆந்திர மாநிலங்களின் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவது, குறிப்பாக வரமலகுண்டா, குருவிநாயனப்பள்ளி சோதனை சாவடிகளில் கூடுதல் போலீஸாரைக் கொண்டு கண்காணிப்பது, வனப் பகுதியில் ரோந்து பணியை அதிகரிப்பது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் பர்கூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ், குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் ஜி.கே. நாயுடு, உதவி காவல் ஆய்வாளர் அனுமந்தப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...