தருமபுரி அருகே அ.தி.மு.க பிரமுகரின் வீடு, அலுவலகத்தில் சரக்கு, சேவை வரித் துறையினர் சோதனை
By DIN | Published On : 01st May 2019 08:41 AM | Last Updated : 01st May 2019 08:41 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அ.தி.மு.க. விவசாய அணி மாநிலத் தலைவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சரக்கு மற்றும் சேவை வரித் துறையினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
பென்னாகரம் அருகே தாளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க விவசாய அணித் தலைவர் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன்.
இவர் தனியார் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். இந்தநிலையில் இவரது வீடு, அலுவலகம் மற்றும் கல்குவாரி ஆகிய இடங்களில் திருச்சியிலிருந்து வந்த சரக்கு மற்றும் சேவை வரித் துறையின் (ஜிஎஸ்டி) நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு அலுவலர் ரவீந்திரநாத் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். அதிகாரிகள் வந்த காரில் கஸ்டம்ஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இந்தச் சோதனையில் ஒப்பந்தப் பணிகளில் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி ஏய்ப்பு ஏதும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், பல்வேறு ஆவணங்களையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக விளக்கமளிக்க திருச்சியில் உள்ள ஜிஎஸ்டி மண்டல அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு டி.ஆர். அன்பழகனிடம், அதிகாரிகள் தெரிவித்துச் சென்றுள்ளனர். இந்தச் சோதனை குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.
சோதனை குறித்து டி.ஆர்.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது கட்டுமான நிறுவனத்தில் திருச்சியிலிருந்து வந்த சரக்கு மற்றும் சேவை வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் அவர்கள் கேட்ட ஆவணங்கள், விளக்கங்களையும் அளித்துள்ளேன்.
மேலும் ஒசூரில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் முறையாக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன். அங்கிருந்து திருச்சி அலுவலகத்துக்கு எவ்வித ஆவணங்களும் கிடைக்கவில்லை என்று அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதனால், திருச்சியில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். எனது வீட்டில் எந்தவித சோதனையும் நடத்தப்படவில்லை. அதேபோல, அலுவலகத்தில் இருந்தும் ஆவணங்கள் ஏதும் எடுத்துச் செல்லப்படவில்லை என்றார்.