கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரியில் சேர்க்கை பெற மே 10 வரை விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 05th May 2019 05:18 AM | Last Updated : 05th May 2019 05:18 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பில் சேருவதற்கு மே 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் 2019-2020-ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப் படிப்பு மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. தற்போது சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மே 10-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில், விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் காலை 10 முதல் மாலை 3.30 மணி வரை விநியோகிக்கப்படும்.
ரூ.50-ஐ செலுத்தி மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி., எஸ்டி மாணவர்கள் சாதி சான்றிதழ் நகலை அளித்து இலவசமாக விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை மே 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் செலுத்த வேண்டும். கல்லூரியில் பி.எஸ்சி., பாடப்பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடப் பிரிவுகளும், பி.ஏ., பாடப் பிரிவில் தமிழ், தமிழ் இலக்கியம் (பி.லிட்), ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளியல் மற்றும் பி.காம், வணிகவியல், பிபிஏ., வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தகுதியுள்ள மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.