கிருஷ்ணகிரி அருகே ஏரியில் செத்து மிதந்த மீன்கள்: ஆக்சிஜன் பற்றாக்குறை என மீன்வளத் துறையினர் விளக்கம்
By DIN | Published On : 06th May 2019 03:36 AM | Last Updated : 06th May 2019 03:36 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அருகே உள்ள தேவசமுத்திரம் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. அதிகாலையில் ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என மீன்வளத் துறையினர் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ளது தேவசமுத்திரம் ஏரி. சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் மீனவ சங்கத்தினர் ஏலம் எடுத்து, மீன்களை வளர்த்து வருகின்றனர். இத்தகைய நிலையில், இந்த ஏரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் உயிரிழந்து, நீரில் ஞாயிற்றுக்கிழமை மிதந்தன.
இதனால், துர்நாற்றம் வீசுவதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் அருகில் உள்ள குடியிருப்போர் தெரிவித்தனர். மேலும், நகரின் கழிவுநீர், இந்த ஏரியில் நேரடியாகக் கலப்பதாலும், மழை இல்லாததால், ஏரியில் நீர் இருப்பு குறைந்ததாலும், மீன்கள் உயிரிழந்ததாக அவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், உயிரிழந்த மீன்களை அப்புறப்படுத்த, அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆக்சிஜன் பற்றாக்குறை
தற்போது நிலவும் பருவகால சூழலால், அதிகாலை நேரத்தில் ஏரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கம். அவ்வாறு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், மீன்கள் உயிரிழந்திருக்கலாம். மேலும், கழிவு நீரால் ஏரி நீரில் அமோனியாவின் அளவு அதிகரித்திருந்தாலும், மீன்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என மீன்வளத் துறையின் ஆய்வாளர் ஆர்.கதிரேசன், தெரிவித்தார். உயிரிழந்த மீன்களை, அப்புறப்படுத்தி, ஏரியின் அருகே இயந்திரத்தின் மூலம் குழி பறித்து அவற்றை புதைக்கும் பணியில் மீனவர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.