ஒகேனக்கல் அருகே மலைப்பாதையில்ரிக் வாகனம் கவிழ்ந்து விபத்து:இருவர் பலி

ஒகேனக்கல்  அருகே பிலிகுண்டுலு  மலைப்பாதைப் பகுதியில்  திங்கள்கிழமை அதிகாலை  ரிக்  வாகனம்

ஒகேனக்கல்  அருகே பிலிகுண்டுலு  மலைப்பாதைப் பகுதியில்  திங்கள்கிழமை அதிகாலை  ரிக்  வாகனம் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளிகள்  இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 
கர்நாடக மாநிலம்,   பெங்களூரு  அருகேயுள்ள  கோடிசிஹள்ளி பகுதியில்  ஆள்துளைக்  கிணறு  அமைக்கும் பணியை முடித்துவிட்டு,   சேலம் மாவட்டம்,   ஆத்தூரில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை மேற்கொள்ள  ரிக் வாகனம் வந்து கொண்டிருந்தது.  இந்த வாகனத்தை  ஆத்தூரைச் சேர்ந்த கண்ணன்  என்பவர்  ஓட்டி  வந்துள்ளார்.   அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம்,  அஞ்செட்டி  அருகே  பிலிகுண்டுலு மலைப் பாதையில் முதல் கொண்டை  ஊசி வளைவில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் ரிக் வாகனம் வந்து கொண்டிருந்த போது,  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் ரிக் வாகனத்தில் சிக்கிக் கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் மண்டாரி (30),  கோதுராம் (18) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.  
இதுகுறித்து தகவலறிந்த ஒகேனக்கல்  தீயணைப்புத் துறையினர் மற்றும் அஞ்செட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து மீட்புப் பணியில்  ஈடுபட்டனர். ரிக் வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், வாகனத்தின் அடியில்  சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில்  சுமார் 2 மணி நேரம் தொய்வு ஏற்பட்டது.  பின்னர் ஜெ.சி.பி. வாகனத்தின் உதவியுடன் மீட்புப் பணி நடைபெற்றது.  இதில் ஓட்டுநர் கண்ணன்,  சுப்சிங்,  ராஐருமா,  புவனேஷ்ராஜ், பிதம்ராஜ், கலாய் ராம், நவின்  உள்ளிட்ட சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலத்த  காயங்களுடன் மீட்கப்பட்டு, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களையும்  பிரேதப் பரிசோதனைக்காக  தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com