பென்னாகரம் அருகே சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
By DIN | Published On : 07th May 2019 09:15 AM | Last Updated : 07th May 2019 09:15 AM | அ+அ அ- |

பென்னாகரம் அருகே கே.அக்ரஹாரம் பகுதியில் புதிய சாலை பணியானது கடந்த இரண்டு மாதங்களாக முழுமையாக நடைபெறாமல் கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்குள்பட்ட கே.அக்ரஹாரம் பகுதியில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். கே.அக்ரஹாரம் பகுதியில் இருந்து பொச்சாரம்பட்டி செல்லும் சாலையானது சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பழுதடைந்து காணப்பட்டது. அதனை புதுபிக்கும் விதமாக பென்னாகரம் ஒன்றியம் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பதிக்கப்பட்டுள்ள நிலையில்,சாலை பணியானது முழுமையாக நடைபெறாமல் உள்ளது. இந்தச் சாலை வழியாக அளேபுரம், மல்லாபுரம், காட்டுக்கொல்லை மற்றும் பொச்சாரம்பட்டி உள்ளிட்ட பகுதிளுக்கு செல்லக்கூடிய இணைக்க கூடிய சாலையாகும்.
இந்த சாலைப் பணியானது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கிடப்பில் உள்ளதால்,இவ்வழியாக இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களை இயக்குவதில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி விடுகின்றனர். சில நேரங்களில் வாகனங்கள் பழுதடைந்து பாதியிலேயே நின்று விடும் நிலையும் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.