காற்றுடன் கனமழை: வாழை மரங்கள் சேதம்

போச்சம்பள்ளி அருகே செவ்வாய்க்கிழமை இரவு காற்றுடன் பெய்த கன மழையில் 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

போச்சம்பள்ளி அருகே செவ்வாய்க்கிழமை இரவு காற்றுடன் பெய்த கன மழையில் 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
போச்சம்பள்ளி, மத்தூர், சந்தூர், வேலம்பட்டி பகுதிகளில் செவ்வாய்கிழமை இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மத்தூர் அருகே குள்ளம்பட்டி பஞ்சாயத்து கே. புதூர் கிராமத்தில் மாலை நேரத்தில் சூறைக் காற்று வீசியது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் சாய்ந்தன. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மாமர விவசாயிகள் பாதிப்பு... சந்தூர் அருகே செவ்வாய்க்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றில் அப் பகுதி விவசாயி ஒருவரின் மாந்தோப்பில் 15 டன் மாங்காய்கள் காற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் உதிர்ந்து விழுந்தன. இதுபோல சுற்றுவட்டாரத்தில் பல மாந்தோப்புகளிலும் மாங்காய்கள் உதிர்ந்து விழுந்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். அகரம் காலணியில் 2 மின் கம்பங்களும், ஆவத்துவாடி கிராமத்தில் ஒரு மின் கம்பமும் காற்றுக்குச் சாய்ந்தன. இதனால் அகரம் கிராமம் இருளில் முழ்கியது.
போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் மா விளைச்சல் வருடந்தோறும் குறிப்பிட்ட அளவில் இருந்து வருகிறது. நிகழாண்டு போதிய மழையின்மையால் விளைச்சல் குறைந்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை வீசிய சூறைக்காற்றில் பல மரங்களிலிருந்து மாங்காய்கள் உதிர்ந்தது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது.
பென்னாகரத்தில்... பென்னாகரம் பகுதியில் புதன்கிழமை காற்றுடன் பெய்த கனமழையால் சாலையோர புளியமரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.
பென்னாகரம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இப் பகுதியில் ஏரி, குளங்கள், குட்டைகள் போன்ற நீர்நிலைகள் வறண்டு காணப்பட்ட நிலையில், தற்போது அனைத்திலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் காற்றுடன் பெய்த கன மழையால் நாகதாசம்பட்டி-தருமபுரி செல்லும் சாலையில் புளியமரம் சாய்ந்தது. இதேபோல் தாளம்பள்ளம் அரசுப் பள்ளி எதிரே சாலை ஓரத்தில் நின்ற மின் கம்பம் மற்றும் புளியமரம் சாய்ந்தன. இதுகுறித்து தகவலறிந்த மின் துறையினர் அங்கு வந்து மின் இணைப்பைத் துண்டித்து , சாலையில் விழுந்த கம்பத்தை அகற்றினர்.  நெடுஞ்சாலைத் துறையினர் நாகதாசம்பட்டி, தாளம்பள்ளம் பகுதியில் சாலையில் விழுந்த புளிய மரத்தை அகற்றினர்.
இதனால் அப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை, புதன்கிழமை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், சில இடங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, சூளகிரி, ஒசூர், ராயக்கோட்டை போச்சம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென காற்றுடன் மழை பெய்தது. காற்றுடன் மழை பெய்ததால், நகரில் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.
கழிவு நீர் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளால், கழிவுநீருடன், மழை நீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடின. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினர். குருபரப்பள்ளியில் சாலையோரத்தில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக  வைக்கப்பட்டிருந்து டிரம், தேசிய நெடுஞ்சாலையில் உருண்டு ஓடியது. வேப்பனஅள்ளியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், மாங்காய் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என விவசாயிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com