கோடை கால கால்நடைகள் பராமரிப்பு

கோடை காலத்தில் கால்நடைகளை எவ்வாறு பராமரிக்க  வேண்டும் என்பது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. 

கோடை காலத்தில் கால்நடைகளை எவ்வாறு பராமரிக்க  வேண்டும் என்பது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. 
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் வியாழக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு: கால்நடைகளை காலை 10 முதல் மாலை 4 மணி வரையில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லக் கூடாது. காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலையில் 4 முதல் 6 மணி வரையிலும் தீவனம் அளிக்கலாம். நீர் தெளிப்பான் மூலம் குளிர்ந்த நீரினை கால்நடைகள் மேல் தெளிக்க வேண்டும். மின்விசிறி அமைக்கலாம். கால்நடை கொட்டகையின் மீது தென்னை ஓலைகளை பரப்பி, அவற்றின் மேல் தண்ணீர் தெளிக்க
வேண்டும். 
கொட்டகையின் மேற்பரப்பில் வெள்ளையடிப்பதும், அறையின் உள்புறத்தில் கருப்பு நிற வண்ணம் அடிப்பதன் மூலம் வெப்ப ஊடுருவலைத் தடுக்கலாம். கொட்டகையை சுற்றிலும் நிழல் தரும் மரங்களை வளர்க்கலாம். கொட்டகையின் உயரம் 9 அடிக்கு குறையாமல் இருக்குமாறு பராமரிக்கலாம். 
தொழுவத்தின் பக்கவாட்டில் நூல் சாக்குகளை நீரில் நனைத்து தொங்கவிட வேண்டும். கால்நடைகளுக்கு எப்போதும் தண்ணீர் கிடைக்கும் வகையில், தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்க வேண்டும். 
தண்ணீருடன் சிறிது உப்பு அல்லது கலப்பு தீவனம் கலந்து அளிக்க வேண்டும். இவற்றை கால்நடைகள் அதிகளவில் அருந்தும். பசுந்தீவனப் பற்றாக்குறையை சரிசெய்ய கால்நடைகள் விரும்பி உண்ணும் மர இலைகளை 8 மணி நேரம் உலர வைத்து, அதன் மீது 2 சதவீத உப்பு மற்றும் வெல்லக் கரைசலை தெளித்து ஒரு நாளைக்கு 15 கிலோ வரையில் வழங்கலாம்.  
மழையின்றி வாடும் இளம் சோளப்பயிரை, கால்நடைகள் உண்ண அனுமதிக்கக் கூடாது. ஆடுகளின் குட்டிகளை, ஆடுகளோடு மேய்க்க விடாமல் தனியாக பராமரிக்க வேண்டும். ஆடுகளை ஒரு பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லாமல் சுழற்சி முறையில் இடம் மாற்றி மேய்க்க வேண்டும். கால்நடைகளை இடமாற்றம் செய்யும்போது, மாலை அல்லது இரவு நேரங்களில் மட்டுமே இடமாற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com