பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
By DIN | Published On : 18th May 2019 08:54 AM | Last Updated : 18th May 2019 08:54 AM | அ+அ அ- |

பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பென்னாகரம் அருகே மஞ்சநாயக்கன அள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மஞ்சநாயக்கன அள்ளியில் இருந்து மேச்சேரி செல்லும் இணைப்புச் சாலைக்கு, பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தார்ச் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையானது தற்போது சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பழுதடைந்து காணப்படுகிறது.
இந்த வழியாக கருமாரியம்மன் கோயில், அனுமந்தபுரம், 5-ஆவது மைல் மற்றும் மேச்சேரி இணைப்புச் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கியச் சாலையாகும். இச்சாலையில் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன. சாலையானது பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால், வாகனங்களை இயக்குவதற்கு மிகவும் சிரமமாக உள்ளதாகவும், சில சமயங்களில் விபத்து ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.