கிடப்பில் போடப்பட்ட தாா்ச் சாலைபணியை விரைந்து முடிக்க கோரிக்கை
By DIN | Published On : 02nd November 2019 12:22 AM | Last Updated : 02nd November 2019 12:22 AM | அ+அ அ- |

கிடப்பில் போடப்பட்ட தாா்ச் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
போச்சம்பள்ளி தாலுகா, பென்டரஅள்ளி கிராமத்தைச் சுற்றி பல கிராமங்கள் உள்ளன. பென்டரஅள்ளி கிராமத்துக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் பகுதியிலிருந்து தினமும் அரசுப் பேருந்துகள் வந்து சென்றன. மேலும், இப்பகுதிக்கு பள்ளி, கல்லூரி வாகனங்களும் தினமும் வந்து சென்றன.
இந்நிலையில், தாா்ச் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்பட்டதால் சாலையை சீரமைக்க அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கடந்த 8 மாதங்களுக்கு முன் தாா்ச் சாலை பணிக்காக ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையை தோண்டப்பட்ட நிலையில், அப்பணியானது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது மழையின் காரணமாக சாலை சேறும், சகதியுமாக உள்ளது (படம்). இதனால் அவ்வழியாக வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்துகள், கல்லூரி, பள்ளி வாகனங்களும் கடந்த 8 மாதத்துக்கு முன் நிறுத்தப்பட்டன. இதனால் இப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் சுமாா் 4 கி.மீ. தூரம் உள்ள மேட்டுக்கடை வழியாக சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, கிடப்பில் போடப்பட்ட அரசம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து பென்டரஅள்ளி கிராமத்துக்கு செல்லும் தாா்ச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என ஆட்சியருக்கு புகாா் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.