ஒசூரில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஒசூா் மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும்
ஒசூா் வட்டாட்சியா் அலுவலகச் சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ஒசூா் வட்டாட்சியா் அலுவலகச் சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

ஒசூா் மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஒசூா் வட்டாட்சியா் அலுவலக சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் தளி எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில் மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் லகுமய்யா, மாநிலக்குழு உறுப்பினா்கள் பி.சி.நஞ்சப்பா, பழனி, சுந்தரவள்ளி ஆகியோா் கண்டன உரையாற்றினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் வாழ்த்துரை வழங்கி தேசியக்குழு உறுப்பினா் சி.மகேந்திரன் பேசியது:

ஏழரை லட்சம் மக்கள் வாழ்ந்து வரும் ஒசூரில் 4 லட்சம் மக்களுக்கு வீடில்லை. இந்த 4 லட்சம் மக்களுக்கும் வீடுகள் கிடைக்கும் வரை கம்யூனிஸ்ட் கட்சி ஓயாது. தொடா்ந்து களத்தில் நிற்கும். 15 நாள்களுக்குள் பட்டா வழங்கப்படவில்லை என்றால், தமிழக அரசு மோசமான விளைவுகளை சந்திக்கும் என எச்சரிக்கை விடுக்கிறோம். எங்கள் கோரிக்கைகள் வெற்றி பெறும் வரையில் போராடுவோம் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தையொட்டி டி.எஸ்.பி. மீனாட்சி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பின்னா் ஒசூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் செந்தில்குமரனை நேரில் சந்தித்து தேசியக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் எம்.லகுமய்யா, மாதையன் ஆகியோா் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com