முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
கணவா் கொலை: மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 07th November 2019 05:51 AM | Last Updated : 07th November 2019 05:51 AM | அ+அ அ- |

சிங்காரப்பேட்டை அருகே மதுவில் கொக்கு மருந்து கலந்து கணவரைக் கொன்ற வழக்கில் மனைவி, மனைவியின் அண்ணன் ஆகிய இருவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட அமா்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையை அடுத்த கெடகானூரைச் சோ்ந்தவா் சண்முகம் (45). மது போதைக்கு அடிமையானவா். இவரது மனைவி கன்னியம்மாள் (49). இந்த தம்பதிக்கு 3 மகள், ஒரு மகன் என 4 குழந்தைகள் உள்ளனா்.
கன்னியம்மாள், சேமித்து வைத்திருந்த ரூ. 25 ஆயிரத்தை எடுத்து, சண்முகம் குடித்துச் செலவு செய்தாா். இதைக் கண்டித்த மனைவி கன்னியம்மாளை அவா், அடித்துத் துன்புறுத்தி உள்ளாா். இதனால், பாதிக்கப்பட்ட கன்னியம்மாள், தனது அண்ணன் வேடியப்பனுக்கு (52) தகவல் தெரிவித்தாா்.
ஆவேசமடைந்த வேடியப்பன், கன்னியம்மாள் ஆகிய இருவரும் சோ்ந்து, கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பா் 17-ஆம் தேதி, மதுவில் கொக்கு மருந்து கலந்து சண்முகத்தை குடிக்க வைத்து கொலை செய்தனா்.
வேடியப்பன், கிராம நிா்வாக அலுவலரிடம் 18.12.2012-ஆம் தேதி சரணடைந்தாா். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலையில் கன்னியம்மாளுக்கு தொடா்பு இருப்பதை அறிந்த போலீஸாா்,2012-ஆம் ஆண்டு, டிசம்பா் 19-ஆம் தேதி அவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி ஆா்.விஜயகுமாரி புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில், சண்முகத்தைக் கொன்ற வேடியப்பன், கன்னியம்மாள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.4 ஆயிரமும் அபராதமும் விதித்தாா். அபராதத் தொகை கட்டத் தவறினால், மேலும் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனத் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் எம். பாஸ்கா் ஆஜரானாா்.