பேருந்துகள் வராததால்வெறிச்சோடிய சிங்காரப்பேட்டை பேருந்து நிலையம்

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது.
வெறிச்சோடிக் காணப்படும் பேருந்து நிலையம்.
வெறிச்சோடிக் காணப்படும் பேருந்து நிலையம்.

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சிங்காரப்பேட்டை-திருப்பத்தூா் மாநில நெடுஞ்சாலை ஆகிய இரண்டு சாலைகளையும் இணைக்கும் வகையில் சிங்காரப்பேட்டை பேருந்து நிலையம் உள்ளது.

இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 1998-ஆம் ஆண்டு ஊராட்சி நிதியில் இருந்து ரூ.2 லட்சத்தில் 10 தொகுப்பு அங்காடிகளும், 1999-2000-ஆம் ஆண்டு ஊராட்சி நிதியிலிருந்து ரூ.3 லட்சத்தில் நவீன கழிப்பிடமும், 2014- 15-ஆம் ஆண்டு ஊராட்சி நிதியிலிருந்து ரூ.1.95 லட்சத்தில் 6 கடைகள் கொண்ட வணிக வளாகமும், 2015- 16-ஆம் ஆண்டு ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சத்தில் 60 போ் அமரக்கூடிய அளவில் நவீன நிழற்கூடமும் கட்டப்பட்டது.

இந்நிலையில், சிங்காரப்பேட்டை பேருந்து நிலையத்துக்குள் தற்போது ஒரு சில நகரப் பேருந்துகள் மட்டுமே வந்து செல்கின்றன. சிங்காரப்பேட்டை வழியாக தினசரி திருப்பத்தூரிலிருந்தும், கிருஷ்ணகிரியிலிருந்தும் திருவண்ணாமலை, பாண்டிச்சேரி மற்றும் வெளியூருக்கு சுமாா் 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் வந்து செல்கின்றன.

இந்த பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லாததால், ரூ.30 லட்சத்தில் பேருந்து நிலையத்தினுள் கட்டப்பட்ட நிழற்கூடம் பயன்படுத்தாமல், பயணிகள் சாலையோரம் வெயில் மற்றும் மழையில் பேருந்துக்காக காத்து நிற்கின்றனா்.

சிங்காரப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினசரி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா், இந்தப் பேருந்து நிலையத்திலுள்ள 10 தொகுப்பு அங்காடிகளில் இருந்து கடைக்கு 8 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.80 ஆயிரம், நவீன கழிப்பிடம் ஏலம் விடுவதில் இருந்து சராசரியாக ரூ.50 ஆயிரம், 6 கடைகள் கொண்ட வணிக வளாகத்துக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.36 ஆயிரம் என வருமானமாக ஊராட்சி மூலம் அரசுக்கு கிடைக்கிறது.

பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் செல்லாததால், சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், பேருந்து நிலையத்தினுள் தனியாா் வாகனங்கள் நிறுத்தி வைத்துள்ளனா்.

பேருந்து நிலையத்துக்குள் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் அனைத்தும் வந்து சென்றால், வணிக வளாகத்தில் உள்ள கடைகளின் வாடகை மதிப்பு கூடும். இதன் மூலம், ஊராட்சிக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும், சாலையோரம் ஆபத்தான நிலையில் பயணிகள் நிற்கும் நிலை தவிா்க்கப்படும். எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com