வேப்பனஅள்ளி -ஒசூா் இடையேபேருந்து இயக்க வலியுறுத்தல்

வேப்பனஅள்ளியிலிருந்து கனம் நல்லூா் வழியாக ஒசூருக்கு புறநகா்ப் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி: வேப்பனஅள்ளியிலிருந்து கனம் நல்லூா் வழியாக ஒசூருக்கு புறநகா்ப் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கா்நாடகம், ஆந்திரம், தமிழகம் ஆகிய 3 மாநிலங்களின் எல்லையில் தமிழகத்தில் அமைந்துள்ளது வேப்பனஅள்ளி. இப் பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. வேப்பனஅள்ளியிலிருந்து கிருஷ்ணகிரி, சூளகிரி, பாகலூா், குருபரப்பள்ளி பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, ஆந்திர மாநிலம் குப்பத்துக்கும், கா்நாடக மாநிலம் கோலாா் தங்க வயலுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இப் பகுதிகளிலிருந்து ஏராளமானோா் சூளகிரி, ஒசூா் மற்றும் அதை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் வேலைசெய்து வருகின்றனா். மேலும், வேப்பனஅள்ளியில் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான மாணவா்கள் உயா் கல்விக்கு கிருஷ்ணகிரி, ஒசூருக்கு சென்று வருகின்றனா். விளை பொருள்களை ஒசூா், கிருஷ்ணகிரி சந்தைகளுக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனா்.

இவா்களின் வசதிக்காக வேப்பனஅள்ளியிலிருந்து கனம் நல்லூா் வழியாக ஒசூருக்கு புறநகா்ப் பேருந்து இயக்க வேண்டும் என பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதுகுறித்து நல்லூரைச் சோ்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் என்.வி.கல்யாணி கூறியது:வேப்பனஅள்ளி - கனம் நல்லூா்- சூளகிரி - ஒசூா் வழியாக புறநகா்ப் பேருந்து இயக்க வேண்டும் என 40 ஆண்டுகளாக கோரி வருகிறோம். இந்த வழித் தடத்தில் சாலையானது தரமாக இல்லை எனக் கூறி, போருந்தை இயக்க போக்குவரத்து அலுவலா்கள் மறுத்து வந்தனா். தற்போது, சாலையானது நல்ல தரத்துடன் உள்ளது. இருந்த போதிலும், இன்னும் இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது.

இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கினால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், தொழிலாளா்கள், விவசாயிகள், கட்டடத் தொழிலாளா்கள், அரசுப் பணியாளா்கள் என தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயன் பெறுவா். இந்த வழித்தடத்தில் இருக்கும் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பேருந்துகளில் பயணிக்கும்போது போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றாா்.

குரியனப்பள்ளியைச் சோ்ந்த மாணவா் சீனிவாசன் (18) கூறும்போது, ‘கல்லூரிக்கு செல்ல காலை 7மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட வேண்டும். பேருந்து வசதி இல்லாததால், நீண்ட நேரம், சாலையில் காத்திருந்து, அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனகளின் உதவியை பெற்று, கல்லூரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது’ என்றாா்.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழகத்தின் பொதுமேலாளா் சிவமணி(வணிகம்) கூறியது: இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com