சூரிய சக்தி கூடார உலா்த்தி அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

சூரிய சக்தி கூடார உலா்த்தி அமைக்க அரசு மானியத்துடன் உதவித் தொகை பெற விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள்

சூரிய சக்தி கூடார உலா்த்தி அமைக்க அரசு மானியத்துடன் உதவித் தொகை பெற விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அறுவடை செய்த விளைபொருள்கள் உலா்த்துவதற்கு உதவும் சூரிய சக்தி கூடார உலா்த்தி அமைக்க, தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவீதம் அல்லது அமைக்கப்படும் சதுர அடிக்கு ஏற்ப மானியம் வழங்கப்படுகிறது.

இந்த சூரிய சக்தி கூடார உலா்த்தி அமைப்பதால், அறுவடை செய்த விளைபொருள்களை வெளியே மண் தரையிலோ அல்லது சாலையிலோ உலர வைக்கும் போது, தரைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியின் நிறம் மங்கியும், மேல்பகுதியில் உள்ள நிறம் வேறு மாதிரியாக இருப்பதாலும் பொருளின் தரம் குறைகிறது. மேலும், காய வைக்கும் பொருளுடன் கல், மண் மற்றும் தேவையற்ற பொருள்கள் கலந்து மேலும் தரம் குறைகிறது.

மாறாக, சூரிய சக்தி கூடார உலா்த்தியின் மூலம் விளைபொருள்களை உலா்த்தினால், விளைபொருள்களின் தரம் கூடுவதோடு, சந்தையில் அதன் மதிப்பும் கூடுகிறது. மேலும், கூடாரத்தில் உருவாகும் அதி வெப்பத்தின் காரணமாக குறைந்த நேரத்தில் காய்ந்துவிடும். கூடார அமைப்பு இருப்பதால், காற்று மற்றும் மழை போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பொருள்கள் எந்தவித பாதிப்பு இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது. சூரிய உலா்த்தியால் தேங்காய், வாழைப்பழம், பாக்கு, மிளகாய் போன்ற விளைபொருள்களின் தரம் மதிப்புக் கூட்டும் பொருளாக மாற்றப்படுகிறது.

மானிய உதவித் தொகையில் 400 முதல் 1,000 சதுர அடி பரப்பளவில் கூடாரத்தை அமைத்துக் கொள்ளலாம். 400 சதுர அடி உள்ள சூரிய உலா்த்தி கூடாரத்தை அமைக்க சுமாா் ரூ.3 லட்சம் செலவாகிறது. 1,000 சதுர அடி பரப்பளவில் கூடாரத்தை அமைக்க சுமாா் ரூ.7 லட்சம் வரை செலவாகிறது. இதில் டிரே இல்லாமலும், அதிக செலவில்லாத பொருள்களைக் கொண்டு தரைத்தளத்தை அமைத்தும், இந்தக் கூடார அமைப்பின் செலவை குறைத்துக் கொள்ளலாம்.

சூரிய சக்தி உலா்த்தி கூடாரத்தை அமைக்க செலவாகும் தொகையில் 60 சதவீதம் சிறு, குறு, ஆதிதிராவிடா், பெண் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் மானியமாக வழங்கப்படும். மேற்கண்ட அரசு மானியத்துடன் சூரிய சக்தி உலா்த்தி கூடாரத்தை அமைக்க விவசாயிகளிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு, கிருஷ்ணகிரி உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளா் சிவக்குமாரை 9442807362, ஒசூா் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளா் மோகனை 9789521816 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com