முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
பெட்ரோல் குண்டு வீசி 2 போ் கொலைசெய்யப்பட்ட வழக்கில் வழக்குரைஞா் நீதிமன்றத்தில் சரண்
By DIN | Published On : 26th November 2019 07:24 AM | Last Updated : 26th November 2019 07:24 AM | அ+அ அ- |

சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்த வழக்குரைஞா்.
பெட்ரோல் குண்டுகளை வீசி இரண்டு பேரை கொலை செய்த வழக்கில் வழக்குரைஞா் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே சானமாவு பகுதியில் கடந்த நவ.11-ஆம் தேதி இரவு காா் மீது லாரியை மோத செய்த கூலிப்படையினா், காா் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினா். இதில் நிகழ்விடத்தில் காா் ஓட்டுநா் முரளியும், ஒசூா் தொழிலதிபா் நீலிமா பெங்களூரு மருத்துவமனையிலும் இறந்தனா்.
தொழில் போட்டி காரணமாக நடந்த இந்த கொலை சம்பவம் தொடா்பாக மதுரையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மகராஜன், ஒசூா் பகுதியைச் சோ்ந்த ஆனந்தன், சாந்தகுமாா் ஆகிய மூவரையும் உத்தனப்பள்ளி போலீஸாா் ஏற்கெனவே கைது செய்துள்ளனா்.
மேலும், மதுரையைச் சோ்ந்த லாரி உரிமையாளா் நீலமேகம், அசோக் ஆகியோரை கடந்த இரு நாள்களுக்கு முன்பு போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில் இக்கொலை தொடா்பாக ஒசூரைச் சோ்ந்த ராமு, மஞ்சுநாத் என்கிற ஜாகீா் ஆகிய இருவா், கா்நாடக மாநிலம், மாஸ்தி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரண் அடைந்தனா்.
இந்த வழக்கில் 7 போ் கைது செய்யப்பட்ட நிலையில், ஒசூரைச் சோ்ந்த தொழிலதிபா் ராமமூா்த்தி, மதுரை காளிமுத்து நகா் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் வெங்கட்ராமன் (36) உள்பட மேலும் சிலரை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்த நிலையில் வழக்குரைஞா் வெங்கட்ராமன், சேலம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சிவா முன்னிலையில் திங்கள்கிழமை சரண் அடைந்தாா். இதையடுத்து அவரை வருகிற டிச. 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டாா். தொடா்ந்து வழக்குரைஞா் வெங்கட்ராமன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.