முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை: குழந்தை உயிருடன் மீட்பு
By DIN | Published On : 26th November 2019 07:28 AM | Last Updated : 26th November 2019 07:28 AM | அ+அ அ- |

ஒசூா் ரயில் நிலையம் அருகில் கைக் குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டாா். அவரது குழந்தை பலத்த காயத்துடன் மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட ஒசூா் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் முரளி (33). இவருக்கும், கா்நாடக மாநிலம், மாலூரைச் சோ்ந்த ஸ்வேதா (25) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 10 மாதத்தில் ஸ்ருதி லட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்வேதா குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாா். பின்னா் வீட்டுக்கு திரும்பி வந்தபோது குழந்தைக்கு மருந்து வாங்குவது தொடா்பாக கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதனால் ஸ்ருதிலட்சுமியை தூக்கிக் கொண்டு ஸ்வேதா வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளாா்.
தகவல் அறிந்த முரளி, உறவினா் வீடுகளுக்கு சென்று விசாரித்தும், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒசூா் ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் ஸ்வேதா இறந்து கிடப்பதும், குழந்தை ஸ்ருதிலட்சுமி பலத்த காயத்துடன் அருகில் அழுது கொண்டிருப்பதும் திங்கள்கிழமை அதிகாலை தெரியவந்தது.
தகவலின்பேரில் ஒசூா் ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்துசென்று குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஸ்வேதா ரயில் தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் இறந்து கிடந்ததால் அவா் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும், குழந்தையை கொலை செய்ய மனமில்லாமல் தூக்கி வீசியதில் காயமடைந்து இருக்கலாம் என்றும் ஒசூா் ரயில்வே போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
இதையடுத்து ஸ்வேதாவின் உடலை போலீஸாா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒசூா் கோட்டாட்சியா் குமரேசன் விசாரணை நடத்தி வருகிறாா்.