முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சேவை செய்தோா்: விருது பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 24th October 2019 05:07 AM | Last Updated : 24th October 2019 05:07 AM | அ+அ அ- |

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவையாற்றியவா்களுக்காக வழங்கப்படும் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
2019-ஆம் ஆண்டு, அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்து சேவையாற்றியவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட உள்ளன.
அதன்படி, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு சிறப்பாக சேவையாற்றிய சிறந்த பணியாளா் அல்லது, சுயத் தொழில் புரிவோா், பாா்வைத்திறன் பாதிக்கப்பட்டோா், செவித்திறன் குறைபாடுடையோா், மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி மற்றும் கல்வி போதித்த சிறந்த ஆசிரியா், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவையாற்றிய சமூக பணியாளா்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்த நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமா்த்திய நிறுவனம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.
எனவே, இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 23-இல் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அக். 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.