கால்நடை காப்பீடு திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த கோரிக்கை
By DIN | Published On : 11th September 2019 10:19 AM | Last Updated : 11th September 2019 10:19 AM | அ+அ அ- |

கால்நடை காப்பீடுத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவின் விவரம்: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கறவைப் பசுக்கள், எருமைகள், ஆடுகளுக்கு காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதன்படி மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் மீதி 25 சதவீதம் கால்நடை வளர்போர் என காப்பீட்டுத் தொகையை செலுத்தி வந்தனர்.
இந்தத் திட்டத்தால், இறந்த கால்நடைக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டம், கடந்த மார்ச் 2018-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. ஆனால், மீண்டும் இந்தக் காப்பீடுத் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவில்லை.
இதுகுறித்து, பலமுறை முறையீடு செய்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, இந்தத் திட்டம் நடைமுறையில்லாததால், இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்காமல் கால்நடை வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காப்பீடுத் திட்டத்தால் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை இல்லாததால், மீண்டும் கால்நடைகளை விலைக்கு வாங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போரின் நலன் கருதி கால்நடைகளுக்கான காப்பீடு திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.