சுடச்சுட

  

  பேருந்து நிலைய மேற்கூரை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தம்: விரைந்து முடிக்கக் கோரிக்கை

  By DIN  |   Published on : 13th September 2019 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பென்னாகரம் பேருந்து நிலையத்தின் மேற்கூரை அமைக்கும் பணியானது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் அவதியுறுகின்றனர். மேலும், இதற்காக பயன்படுத்தப்பட்ட ஜல்லி மற்றும் கம்பிகளால் பேருந்துகள் நிறுத்த இடையூறாக உள்ளதாக ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
   தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு பென்னாகரம் பேருராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
   இப்பேருந்து நிலையத்துக்கு பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தாசம்பட்டி, ஏரியூர், நாகமரை, ஒகேனக்கல், ஊட்டமலை, சின்னம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மேலும், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் மிக அருகில் உள்ளதால், பென்னாகரம் பேருந்து நிலையமானது எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.
   இந்த நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்,பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் அமருவதற்கும் மற்றும் மழைக் காலங்களில் நிற்பதற்கும் போதுமான வசதியில்லாததால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
   இந்த நிலையில், 2018-19-ஆம் நிதியாண்டில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து, அன்புமணி ராமதாஸ் பேருந்து நிலைய மேற்கூரை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
   மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
   பென்னாகரம் பேருந்து நிலையம் இட நெருக்கடியாக உள்ள நிலையில், மேற்கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட மணல், ஜல்லிக் கற்கள், கட்டுமானக் கம்பிகள் உள்ளிட்டவைகள் பேருந்து நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்துகள் நிறுத்த இடையூறாக உள்ளதாக ஓட்டுநர்கள், பேருந்து நிலையக் கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
   மேலும், மேற்கூரை அமைக்கும் பணியானது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், மாணவ-மாணவியர், பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
   எனவே, பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட மேற்கூரை அமைக்கும் பணியினை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai