ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவு
By DIN | Published On : 13th September 2019 09:54 AM | Last Updated : 13th September 2019 09:54 AM | அ+அ அ- |

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைந்துள்ளதால், நொடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
கர்நாடகம், கேரளத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவுகளும் குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைந்துள்ளது.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்த தண்ணீர், வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 65 ஆயிரம் கன அடியாகவும், 11 மணி நிலவரப்படி நொடிக்கு 55 ஆயிரம் கன அடியாக தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. மாலை 6 மணி நிலவரப்படி, தண்ணீரின் அளவுகள் மேலும் குறைந்து நொடிக்கு 40 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க 7-ஆவது நாளாகவும், அருவிகளில் குளிக்க 37-ஆவது நாளாகவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும், முதலைப் பண்ணை, நடைபாதை, ஆலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் போலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.