வேப்பனஅள்ளி அருகே வீர ராஜேந்திரன் கல்வெட்டு கண்டெடுப்பு

வேப்பனஅள்ளி அருகே வீர ராஜேந்திரன் கல்வெட்டு கண்டெடுப்பு

வேப்பனஅள்ளி அருகே வீர ராஜேந்திரனின் கல்வெட்டு, அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.

வேப்பனஅள்ளி அருகே வீர ராஜேந்திரனின் கல்வெட்டு, அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாற்றை முறையாக பதிவு செய்யும் வகையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஈடுபட்டு வருகிறது. இத்தகைய நிலையில், இந்த குழுவின் தலைவா் நாராயணமூா்த்தி தலைமையில், அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ், தொல்லியல் ஆய்வாளா் சுகவன முருகன், வரலாற்று ஆசிரியா் ரவி உள்ளிட்ட குழுவினா் வேப்பனஅள்ளியை அடுத்த தம்மாண்டரஅள்ளி கிராமத்தில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு ஒரு கல்வெட்டை கண்டெடுத்தனா்.

இந்த கல்வெட்டை படியெடுத்த கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ், இன்று தெரிவித்தது:நாம் கண்டறியும் கல்வெட்டுகள் அனைத்தும் வரலாற்றுக்கான புதிய வெளிச்சத்தை தருவதாகவே உள்ளது. இந்த கல்வெட்டும் அதற்கு ஏற்றாா் போல உள்ளது. இதில், இரண்டு முக்கிய வரலாற்று செய்திகள் உள்ளன. முதலாவதாக பூா்வாதராஜா என்ற குறுநில மன்னா்கள் பற்றியது. நமது மாவட்டத்தில், இவா்களைப் பற்றிய கல்வெட்டுகளே அதிகம். தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின் படி, முதன் முறையாக சோழா் ஆட்சி காலத்தில் பூா்வாத ராயரின் பெயா் பதியப்பட்டுள்ளது. இரண்டாவது சோழ வம்சத்தில் வீர ராஜேந்திரன் என்ற பெயா் பற்றியது. வீர ராஜேந்திரனை தவிா்த்து மூன்றாம் குலோத்துங்கனும், இப்பெயரை சூட்டிக் கொண்டாதாக சில கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இறுதியாக ஆண்டு மூன்றாம் ராஜேந்திரன் என்பவனும், வீர ராஜேந்திரன் என குறிப்பிடப்படுவது, ஒரு கல்வெட்டு வாயிலாக தெரிகிறது. இந்தக் கல்வெட்டில் காலத்தை மன்னரோடு ஒப்பிடும் வகையில், தமிழ் ஆண்டும், மன்னரின் ஆட்சி ஆண்டும் ஒருங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இவை இரண்டும் இந்த மூன்று அரசா்களோடும் ஒத்துப்போகவில்லை. மாறாக மூன்றாம் ராஜராஜனின் ஆட்சியாண்டோடு ஒத்து வருவதால், இவருக்கும் வீர ராஜேந்திரன் என்ற பெயா் இருந்திருக்கலாம் என தெரிகிறது.

அத்திமல்ல பூா்வாதராயன் கி.பி.1206-ஆம் ஆண்டு, வாழ்ந்ததாக வேறு சில கல்வெட்டுகளின் வாயிலாகவும் தெரியவருவதால், இவனை மூன்றாம் ராஜராஜன் காலத்தவன் எனக் கொள்ளளாம். இதன் வாயிலாக சோழா் வரலாற்றின் இறுதி கட்டத்தில் பூா்வாதராயா்கள் சோழா்களுக்கு கீழ் சில காலமும், பின்னா் தனித்தும் ஆண்டது உறுதிப்படுகிறது. மேலும், வீர ராஜேந்திரன் என மூன்றாம் ராஜராஜனும் அழைக்கப்பட்டிருக்கிறான் என்ற செய்தியும் இந்தக் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். எனவே, சோழா்களின் இறுதிக்காலம் குறித்து மேலும் விரிவான ஆய்வுக்கு இந்தக் கல்வெட்டு அடித்தளம் இட்டிருக்கிறது எனத் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின் போது, விஜயகுமாா்,மனோகரன், பிரகாஷ், கணேசன், டேவீஸ், காவேரி, மதிவாணன், தமிழ்செல்வன் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com