மானியத்தில் இரு சக்கர வாகனம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானியத்தில் இரு சக்கர வாகனம் பெற பணியாற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானியத்தில் இரு சக்கர வாகனம் பெற பணியாற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் மொத்த தொகையில் 50 சதவீதம் என இரண்டில் எது குறைவோ அந்தத் தொகையை அரசு மானியமாக வழங்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.31,250 வழங்கப்படும். 125 சிசிக்கு குறைவான கியர்லெஸ் வாகனத்தை பயனாளிகள் தங்களது சொந்த நிதியில் இருந்தோ, வங்கி கடனி அல்லது கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்தோ கடன் பெற்று வாங்கலாம். 
இந்தத் திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் 18 முதல் 40 வயதுக்குள்பட்டவராகவும், விண்ணப்பிக்கும் போது, இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். பயனாளியின் ஆண்டு வருவாய் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பயனாளிகள் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளி மட்டுமே தகுதியுடையவர் ஆவர்.
மேலும் அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், சுயமாக சிறு தொழில் செய்யும் பெண்கள், அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சமூக அடிப்படை நிறுவனங்கள், ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மாவட்ட மக்கள் கற்றல் மையம் ஆகிய நிறுவனங்களில் தொகுப்பூதியம், தினக்கூலி அல்லது ஒப்பந்த ஊதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் மகளிர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் ஆவர்.
வேலை செய்யும் மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் பெண்கள், பெண்களை குடும்பத் தலைவராக கொண்டு குடும்பங்களில் உள்ள பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளி பெண்கள், 35 வயதுக்கு மேல் உள்ள திருமணமாகாத பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதன்படி எஸ்சி பெண்களுக்கு 21 சதவீதமும், எஸ்டி பெண்களுக்கு 1 சதவீதமும், மாற்றுத் திறனாளி பெண்களுக்கு 4 சதவீதமும் வழங்கப்படும். 
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 2019-20-ஆம் ஆண்டிற்கு ஊரக பகுதிகளுக்கு 2030 மற்றும் நகர்புறப் பகுதிகளுக்கு 603 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகத்தில் பெற்று, நிறைவு செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com